பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சமுத்திரக் கதைகள்


பலத்த கைதட்டல்கள், அவளை மேற்கொண்டு சிறிது நேரம் பேசவி டாமல் கட்டிப்போட்டது. அந்த தட்டல்களுக்கு கைக்கூப்பிவிட்டு, ஓசை அடங்கியதும், லூர்துமேரி மேலும் உற்சாகமாகப் பேசினாள்.

“சரி..... சொந்த புராணத்தை விட்டு, இந்த கல்யாண புராணத்திற்கு வருகிறேன். மணமகள் ராணி, மூன்றாண்டுகளுக்கு முன்பு, அகலிகையாகி, இங்கே கொண்டுவரப்பட்டாள். ஓராண்டுக்கு முன்பு, மணமகன் ராமு, அபலையர்களும் . ஆணாதிக்கமும் என்ற தலைப்பில் பல்கலைக் கழகத்தில் முனைவர்ப் பட்டம் வாங்குவதற்காக இந்த காப்பகம் வந்தார். என் மகள்களிடம் நேர்காணல் செய்தார். உள்ளத்தால் களங்கப் படாத என் மகள் ராணியை அவருக்குப் பிடித்து விட்டது. சொத்து சுகத்தை துளசாக உதறிவிட்டு, மணமுடிக்க வந்துவிட்டார். இப்படி ஊருக்கு பத்து பேர் கூட வேண்டாம்.ஒருவர் முன்வந்தாலே, பாரதம் வாழும் கிராமங்களை புதுமையாக்கி விடலாம். இந்த திருமணத்தின் மூலம், நான் மூன்றாவது தடவையாக மாமியாராகிறேன். இப்படி முந்நூறு தடவை மாமியாராக விரும்புகிறேன்.”

கூட்டத்தில் ஒரு சிலரே முதலில் கைதட்டினார்கள். அந்த தட்டல்களை புரியாதவர்கள், பக்கத்தில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் மூன்றாவது தடவை மாமியார் என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். இதனால், கூட்டத்தின் சராசரிகள், அவள் பேச்சுக்கு மீண்டும் தடங்கல் ஏற்படும் அளவிற்கு பலமாக தலையட்டி வலுவாக கைதட்டினார்கள். லூர்து, பேச்சை சிறிது நிறுத்திவிட்டு கூட்டத்தை, குறுஞ்சிரிப்பாகப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.

“மணமகள் என் மகள் என்பதால், நான் அதிகமாக குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் மணமகனான என் மருமகனைப் பற்றி சொல்லியாக வேண்டும். என் கணவர் இளங்கோவைப் போல, இவரும் ஆணாதிக்க சிந்தனை இல்லாதவர். இப்படி சொல்வது எதிர்மறைதான். ஆக்க பூர்வமாக சொல்ல வேண்டுமானால் மணமகன் பெண்ணியவாதி. ஒருவனுக்கு ஒருத்திதான் என்ற தமது தாரக மந்திரமாம் தமிழ் பண்பாட்டின் சின்னமாவார்."