பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 97

மகான்களிடம் போனால் அவர்களின் இருப்பிடத்தில் நமக்கு ஏதோ ஒருவிதமான சுக உணர்வு ஏற்படும் என்பார்கள். அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் அவர்கள் அருகே இருக்கும்வரை வாழ்க்கைப் பிரச்சினைகளோ துக்கச் சுமைகளோ மறந்துபோய்விடும் என்பார்கள். இதுபற்றி, எனக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால், எம்.கே. அவர்கள் முன்னிலையில், நாம் இருக்கும்போது மட்டுமல்ல, அவரைவிட்டுப் பிரிந்து வீட்டிற்கு வந்தபிறகும்கூட, சுமையாகத் தெரிந்த வாழ்க்கை நமக்கு சுவையாகத் தெரியும். காரணம், அவர் சிறியன சிந்தியாதார். ஒரு தடவை தோழர் வி.பி. சிந்தனிடம் உங்களுக்கும் எம்கேவுக்கும் சாவே, கிடையாது. எந்த விபத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் நீங்கள் தப்பித்து விடுவீர்கள்’ என்று கூறினேன். உடனே, அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “தயவு செய்து சிறியவனான என்னை அந்தப் பெரியவருடன் ஒப்பிடாதீர்கள்’ என்று உணர்ச்சித் ததும்ப கூறினார்.

நான் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். நாவல்கள் படைத்திருக்கிறேன். கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால், எம்.கே.--யுடன் எனக்கு ஏற்பட்ட நட்பையும், தோழமையையும், அவரது இதய விசாலத்தையும் என்னால் உள்ளது உள்ளபடி விளக்க முடியவில்லை. சில சங்கதிகள் அனுபவத்தால் உணரக் கூடியதேயன்றி, அடுத்தவர்களுக்கு சொல்லியல்ல என்ற கருத்தை இப்பொழுது நான் முழுமையாக நம்புகிறேன். திரு. எம். கே. அவர்களை, நான் எப்போதும் பெரியவர் என்ற முறையிலேயே தரிசித்தேன். ஆனால், அவரோ என்னிடம் தோழன் என்ற முறையிலேயே பேசினார்; நடந்து கொண்டார்.

எம். கல்யாணசுந்தரம் நினைவுமலர் - 1988.

. 8 -