பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 109

நம் நாட்டவர்கள் குறிப்பாக தமிழர்கள், கொத்தடிமைகளாகச் சென்று குற்றுயிராகத் துடித்த சோக நிகழ்ச்சிகள் பாரதியாரை உலுக்கியிருக்கின்றன. பல பாடல்களாக புனைந்தான் பாரதி. இவற்றில் இரண்டு பாடல்களுக்கு, நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகள் இவை.

நெல்லிை நகரில் ஒரு இளம் தாய். கூலித் தொழிலாளி

பெற்ற பெண் குழந்தையை, உறவினர் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு, மகளின் எதிர்காலம் கருதியோ என்னவோ, பிஜித் தீவிற்குப் போய் விடுகிறாள். அங்கிருந்து, மாதா மாதம் குழந்தையின் பராமரிப்பிற்காக பணம் அனுப்பி வைக்கிறாள். கரும்புத் தோட்டத்திலே ஊழியம் செய்யும் அந்த கூலிப் பெண்ணால் மகளை மறக்கவும் முடியவில்லை. எப்படியோ, காலம் உருண்டு மகளை கன்னி பெண்ணாக்கி விடுகிறது. நெடிய கொடிய பிரிவிற்கு பிறகு ஆசை மகளின் ஒவ்வொரு அணுவையும் பார்த்து ரசிப்பதற்காக, தாயகம் திரும்புகிறாள்.

நெல்லை நகரில் இருந்து இளம் பெண்ணாய் போய் மூதாட்டியாய் திரும்பும் அந்த தாய்க்கு, ஒரு தயக்கம். மகள் வாழும் வீட்டிற்கு போகத் துடித்த மனத்தை கல்லாக்குகிறாள். பி.ஜி. தீவில் இருந்து அங்கங்கள் குறைந்து, குஷ்டரோகியாகத் திரும்பிய தன்னை, மகள் அடையாளம் காணக்கூடாது என்று அவள் மனம் வைராக்கியப் படுகிறது. எப்படியோ ஒரு உறவினர் மூலம், மகளை தாமிரபரணி நதிக் கரையோரம் வரவழைத்து விடுகிறாள். மகளைக் கண்டு கண்ணிர் கொட்ட - அதாவது மகளை கண்குளிரப் பார்த்த அந்த தாய், தாயை அடையாளம் காணாமலே அந்த இளம்பெண் சென்ற பிறகு அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிபோட்டு தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறாள்.

இந்த நிகழ்ச்சி பாரதிக்கு எட்டுகிறது. துடியாய் துடிக்கிறான். மூன்று நாட்கள் வரை அவனுள் மூச்சு மட்டுமே இயங்குகிறது. இறுதியில் “பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்” என்ற பாடலை கண்ணிரும் கம்பலையுமாக எழுதுகிறான். இதனால்தான் அவனால் பாமரர்களும் படிக்கக்கூடிய கவிதைகளை எழுத முடிந்தது.

சில மனிதர்கள், சிறந்த கவிஞர்களாக இருப்பார்கள்; ஆன்ால், நல்ல மனிதர்களாக இருக்கமாட்டார்கள். சில கவிஞர்கள், நல்ல மனிதர்களாக இருப்பார்கள்; ஆனால் சிறந்த கவிஞர்களாக இருக்கமாட்டார்கள். பாரதியோ இந்த இரண்டிலும் உச்சம்.

தீக்கதிர் மலர் - 1995.