பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 3

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றான் மக்கள் எதிரியாக விளங்கிய இட்லர். வரலாற்றில் உண்மையை மறைப்பதும் ஒருவிதப் பொய்யே என்றார் மனித நேயப் படைப்பாளியான லியோ டால்ஸ்டாய். இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையே மெய்யும், மெய்கலந்த பொய்யும், மெய்தவிர்த்த பொய்யுமாய் எழுதப்பட்டதே வரலாறு. இதனால்தான், ஜான் கந்தர், அண்ணல் காந்தியை நழுவும் ஆசாமி என்றான். 1857ல் கல்கத்தாவில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம், முதல் சுதந்திரப் போராக வரலாற்றுச் சிறப்பு பெற்று, அதற்கு முன்பே வேலூரில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. விடுதலைப் போர், வங்காள சந்நியாசிகளால் துவக்கப்பட்டது என்பது பொய் கலந்த மெய்யென்றால், இவர்களுக்கு முன்பே வாழ்ந்த வைகுண்ட சாமியைப் பற்றிய மெளனம் மெய்தவிர்த்த பொய்யாகும்.

இத்தகைய வரலாற்றுப் புதை மண்ணிலிருந்து வைகுண்ட சாமி போன்ற ஆன்மீகப் போராளிகளை மீட்டெடுத்து, சாதிக்குப் பலியாகும் இன்றைய சராசரித் தமிழனிடம் எடுத்துச் செல்ல வேண்டியது இப்போதையக் கட்டாயக் கடமையாகும். ஒரு லட்சியப் போராட்டத்திற்கான வரலாற்றில் இறுதிக் கட்டத்தில் வெல்கிறவர்களே அறியப்படுகிறார்கள். இதே லட்சியத்திற்காக, ஆரம்பத்தில் போராடியவர்கள் வரலாற்று வெள்ளத்தில் மூழ்கிப் போகிறார்கள். அப்படிப்பட்ட வெள்ளமும் இதற்கு ஏதுவாக, அதன் போக்கில் விடப்படாமல் விருப்பு, வெறுப்பு என்ற அணைகளால் கட்டப்பட்டு தேக்கப்படுகிறது.

இதனால்தான் ஒரு அம்பேத்காரை தெரியும் நமக்கு, ஒரு அயோத்தி தாசரையோ, இரட்டை மலை சீனிவாசனையோ அதிகம் தெரியாது. அண்ணல் காந்தியைத் தெரிந்த அளவிற்கு, ஒரு திலகரையோ, ஒரு வ.உ.சி.யையோ தெரியாது. பகத்சிங்கைத் தெரிந்த அளவிற்கு ஒரு வாஞ்சி நாதனைத் தெரியாது. திருத்தணிப் போராட்டத்தை நடத்திய மா.பொ.சிவஞானம் அவர்களைத் தெரியும். ஆனால் அவருக்கு முன்பே திருத்தணி தமிழகத்தோடு சேர வேண்டும் என்று வீடு வீடாக இயக்கம் நடத்திய மங்கலம் கிழாரைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? இது வரலாற்றுக் குற்றத்தோடு வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாத குற்றமும் ஆகும். இந்தக் குற்றங்களால் மக்களுக்கு பரந்த அளவில் எடுத்துச் செல்ல முடியாதபடி முடக்கப்பட்ட போராளிகளில் வைகுண்டரும் ஒருவர்.

சாமித்தோப்பு சாமி

கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள பூவண்டன் தோப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்