பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 127

இருந்து பல்வேறு சாட்சியங்களைக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் விசாரணை குறுக்கு விசாரணை என்று செய்யப்படுகிறார்கள். வழக்கின் ஆவணங்கள் அலசப்படுகின்றன. சட்ட நுணுக்கங்கள் இருதரப்பு வழக்கறிஞர்களாலும் பிரகாசப்படுத்தப்படுகின்றன. மாண்புமிகு நீதிபதியும் இந்த வாதப் பிரதிவாத தகவல்களையும், சாட்சியங்களையும் ஆவணங்களையும் தராசு முனையில் ஆய்ந்து வேண்டுதல் - வேண்டாமை இல்லாத நீதித்தன்மையோடு, ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணி எடைபோட்டு, தீர்ப்பு வழங்குகிறார். ஆனால், இந்த தீர்ப்புகளோ அரசு கோப்புகளில் சமாதியாகி விடுகின்றன. ஆயிரம் ரூபாய்க்கு குதிரை வாங்கி, அதை தக்க வைத்துக் கொள்வதற்கு ஐந்து ரூபாய்க்கு கயிறு வாங்காத கதைதான் இந்த நீதிக்கதையும்.

மாண்புமிகு உறுப்பினர்களின் பார்வைக்கு......

பெரிய பெரிய வழக்குகளில் தீர்ப்புகள் உடனடியாய் செயல்படுவதற்காக பத்திரிகை கண்காணிப்பும், பொது நிறுவனங்களின் முன்னெச்சரிக்கையும் உதவுகின்றன. ஆனால், பத்திரிகைகளில் வராத ஏழை-எளியவர்களின் தீர்ப்புகளோ பெரும்பாலும் நீர்த்துப் போகின்றன அல்லது தீர்த்துக் கட்டப்படுகின்றன. இந்த அவலத்தைப் போக்க ஒரே வழி, சுயாட்சி அதிகாரம் கொண்ட நீதிமன்றத் தீர்ப்புகளுக்கான கண்காணிப்பு ஆணையம் ஒன்றை பல கிளைகளோடு உருவாக்குவதுதான்.

நாடாளுமன்றத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நமது தமிழக உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினை குறித்து சிந்திக்க வேண்டும். புதிய மக்களவையும் இத்தகைய ஆணையத்திற்கு வடிவம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். சமூக நீதியில் அக்கறை கொண்ட நமது சட்டப்பேரவை உறுப்பினர்களும் வரும் கூட்டத் தொடரில் இந்த ஆணைய உருவாக்கம் குறித்து மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். இதனால் எண்ணற்ற ஏழைகளின் ஊமை அழுகை, ஆனந்தப்பள்ளாக ஒலிக்கும். இந்த வரலாற்றுக் கடமையை மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் தட்டிக்கழிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.

நவசக்தி வார இதழ் - 1999.