பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 135

பக்கம் பக்கமாக திருத்தப்பட்டதை தமிழ் தெரியாத ஒரு வங்காளி இயக்குநரிடம் காட்டி “சமுத்திரம் இவ்வளவு தப்புகள் செய்திருக்கிறார்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் இதனாலேயே என்னை வேறு துறைக்கு மாற்றும்படி அமைச்சரவைக்கு கடிதம் எழுதியதாகப் பின்னர் அறிந்தேன்.

என் நிறத்திற்காக சிரித்தவர்கள்-என் உச்சரிப்பிற்காக சிரித்தவர்கள். இப்படி நாளெல்லாம் சிறுமைப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எங்கள் பிரிவுத் தலைவர் எனக்கு சரியாக மொழி பெயர்ப்பு வரவில்லையென்றும், ஆகையால் எனது மொழி பெயர்ப்பை பிற சகா திருத்தவேண்டும் என்றும் ஒரு சர்க்குலரை ஆங்கிலத்தில் எழுதி வெளியே தொங்கபோட்டார்.

இந்த சர்க்குலர் எனக்கு ஒரு தன்மானப் பிரச்சினையாகியது. அப்படி எழுதியவர் அன்று மட்டும் என் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் கொலை செய்திருப்பேன். கரோல்பாக்கில், அவரது சின்னவீட்டில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. இந்த சர்க்குலர் படி ஒவ்வொருவரிடமும் குட்டுப்படுவது என்பது என்னால் முடியாத காரியம். ஆகையால் வங்காள மேலதிகாரிக்கு ஆங்கிலத்தில் ஒரு விடுமுறைக் கடிதம் இப்படி எழுதினேன்.

“எனது தமிழ் செய்திப் பிரிவுத் தலைவர் இன்னொரு சகாவான ஒரு பெண்ணின் தூண்டுதலால் என்னை இழிவுபடுத்தி ஒரு சர்க்குலர் போட்டிருக்கிறார். ஆகையால் என் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மனம் பழையநிலைக்கு வருவதற்காக எனக்கு இரண்டு நாள் விடுமுறை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

(Sir, As I am Mentaly upset by a circular issued by the unit incharge, Mr..... denigrating me, instigated by our lady collague Miss..., I request you to give me two days casual leave, to recover my shattered feelings")

இந்த மாதிரியான விடுமுறைக் கடிதம் வானொலி நிலைய வரலாற்றிலேயே புதிதாக இருந்திருக்கும். மேல் அதிகாரியான வங்காள இணை இயக்குநர் அதிர்ந்து போனார். அந்தக் கடிதத்தை அவரால் ஏற்க முடியாது. ஆகையால் கரோல்பாக்கில் நான் தங்கி இருந்த அறைக்கு வானொலி கார் வந்தது. என்னை அந்த அதிகாரியின் அறைக்குள் கொண்டு போய் போட்டது. நான் போவதற்கு முன்பே எனது சகாக்கள் இரண்டு அணிகளாக ப் பிரிந்து அங்கு வாதி ட் டு க் கொண்டிருந்தார்கள்.