பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தாழ்த்தப்பட்ட தமிழிசை

சங்கீதமும்-இசையும்

இதில் பாடப்படுகின்ற மொழி அந்நியமானது. மக்களுக்குப் புரியாதது. இன்னும் சொல்லப்போனால், அவர்களை மட்டம் தட்டுவது. ஆனால், இசை என்பதோ, எந்த மக்கள் அதைச் செவிமடுக்கிறார்களோ, அந்த மக்களின் மொழியில், அவர்களின் பண்பாட்டை எதிரொலிப்பதாகவும், மேம்படுத்துவதாகவும் ஒலிக்கக்கூடியது. சங்கீதம் காட்டில் பெய்த மழை. இசை, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல. சுருக்கமாகச் சொல்லப் போனால், சங்கீதம் ஒரு போலித்தனமான பிரமையை ஏற்படுத்துவது. இசையோ, தன்னை மக்களின் மொழி மூலம் பாட்டாக புரியவைத்து, அந்தப் பாட்டையும், அதன் பொருளையும் உணரவைக்கும் அடிநாதம். இதனால்தான், சைவ சமயக் குரவர்களில் ஒருவரும், திருவாசகத் தேனைக் காதிலும் கருத்திலும் பாய வைத்தவருமான மாணிக்கவாசக சுவாமிகள், “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்று அருளினார். ஒரு பாட்டின் பொருளை அதைக் கேட்பவர்களுக்கு புரியவேண்டும் என்று சொல்லாமல் சொன்னார். ஆனால், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று பேசுவதற்கு என்றே பிறந்தவர்கள் உள்ள இந்தத் தமிழகத்தில், கேட்பவர்கள் பொருள் உணர்ந்து கேட்கும்படியான தமிழ்ப் பாடல்கள் பாடப்படுகின்றனவா?

இல்லை. முக்கால்வாசி இல்லை. மீதிக் கால்வாசியிலும், பெரும்பகுதி தமிழ்ப் பாடல்கள் வடமொழி கலந்தவை. இதற்குக் காரணம், தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளும், சியாமா சாஸ்திரிகளின் பாடல்களும், முத்துஸ்வாமி தீட்சிதரின் பக்திப் பாடல்களும் தமிழிசையை ஆக்ரமித்து, அதை மெல்ல மெல்ல சாகடித்துக் கொண்டிருப்பதே. இந்தச் சங்கீத மும்மூர்த்திகள் பிறப்பதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, மூன்று தமிழிசை மேதைகள் நமக்காக, தமிழிசையோடு கூடிய பல அரிய பாடல்களை விட்டுச் சென்றார்கள்.

தமிழிசை மேதைகள்

முதலாமவர், 1550-ம் ஆண்டு சீர்காழியில் பிறந்து, நூற்றுக் கணக்கான தமிழ்ப் பாடல்களை இயற்றிய முத்துத் தாண்டவர். இவரது பாடல்கள் இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயில் வரை கச்சேரிகளில் ஒலித்தன. இப்போதோ கேட்கக் கிடைக் காதவை இன்னொரு தமிழிசை மேதையான மாரிமுத்தாபிள்ளை, 1712-ம் ஆண்டு சிதம்பரம் அருகே தில்லைவிடங்கத்தில் பிறந்து, வெண்பா, மடக்கு, திருக்கு என்று பலப்பல வகையான பாக்களையும், பொருள் செறிவு கொண்ட