பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 52 தாழ்த்தப்பட்ட தமிழிசை

தமிழிசைக்கு ஆபிரஹாம் பண்டிதர், சட்டாம்பிள்ளை போன்ற கிறிஸ்துவப் பெரியோர்களும் அருஞ்சேவையாற்றியிருக்கின்றனர். இந்த வகையில் தமிழிசைக்குப் புத்துணர்ச்சி ஊட்டிய பெருமை, கிறிஸ்துவத் தமிழர்களுக்கும் உண்டு.

உட்பகை

தமிழிசை இயக்கத்தை யார் நடத்தினாலும் அதைப் போற்றியே ஆகவேண்டும். ஆனாலும் இதை நடத்துகிற தோழர்களுக்கு ஒரு பரிந்துரையும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தமிழிசை என்ற பெயரில் பகுத்தறிவுக்குப் புறம்பானது என்று கூறிக்கொண்டு, தேவார திருவாசகப் பாடல்களை இசைக்காமலிருந்தால், அது தமிழிசைக்கு ஒரு உட்பகையாகும். இதேபோல், இந்த இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, அல்லது மொழிக்கோ எதிராகவும் திருப்பி விடலாகாது. எந்த வர்க்கம் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அந்த வர்க்கம், தனது சிறுபான்மை கலாச்சாரத்தைக் பெரும்பான்மை மக்கள்மீது சுமத்துவது உலக வரலாறு.

பாட்டாளி மக்களால் மேற்கொள்ளக்கூடிய செயற்கரிய செயல்களை மேட்டுக்குடி மக்கள் செய்ய முடியாமல் போகும்போது, அவற்றை இழிவுபடுத்துவது முதலாளித்துவக் கலாச்சாரம். பனை ஏறுதல், மீன் பிடித்தல் போன்ற வீரத் தொழில்கள் இழிவாகக் கருதப்பட வேண்டும் என்ற ஒரு நிலையை தோற்றுவித்த பிரபுத்துவவாதிகள்தான் தமிழிசை மேல் கர்நாடக இசையை அழுந்த வைத்திருக்கிறார்கள்.

தமிழிசைப் பாடல்கள் மக்களை மேம்படுத்துவதாகவும், பிற மொழிக்காரர்களை மட்டந்தட்டாததாகவும் இருக்கவேண்டும். தமிழிசையை, அப்போதைய ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டிதொட்டியெங்கும் பரப்பியது போல் மீண்டும் பரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கையே கொள்ளவேண்டும். இல்லையானால், தாளம் தவறிப்போகும்; தமிழிசையும் தளர்ந்து போகும்.

வாசுகி - 1994.