பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 15

கம்பரைப் பின்பற்றி...

துஞ்சன்-எழுத்தச்சன் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மலையாள இலக்கியத்தின் பிதாமகன். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மலையாளத்தில் இலக்கியமாக்கியவர். இன்றும் இவரது இந்த இரண்டு படைப்புகளும் பயபக்தியோடு படிக்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் இவர் மலையாள மொழி இலக்கணத்திற்கு உட்படாத விதத்தில் இவற்கைக் கவிபாடியவர். இது மலையாளப் பண்டிதர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. தமிழ் இலக்கியத்தில் பல்வேறு புலவர்களின், மன்னர்களின் காலக் கட்டங்களை விஞ்ஞானப் பூர்வமாக அணுகி நிச்சயித்ததால், இன்றும் தமிழறிஞர்களிடையே வேண்டாதவராய் முணுமுணுப்பை ஏற்படுத்தும் பேராசிரியர் வையாபுரி பிள்ளைதான், எழுத்தச்சனின் மகாபாரதமும், ராமாயணமும், கம்பனின் கம்பராமாயண விருத்தப்பா இலக்கணத்தைப் பின்பற்றுபவை என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்தை, நான் கருத்தரங்கில் தெரிவிப்பதாக இருந்தேன். ஆனாலும் குறிப்பிடவில்லை.

தமிழன் உலகை ஆண்டவன், கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தவன் என்று நம்முடைய பண்டிதர்கள் பேசிப்பேசி, நம்மை பிறமொழியினர், ஒரு ‘மாதிரியாகப் பார்க்காமல், ஒரு மாதிரிப் பாாக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் என் பங்குக்கும், இலக்கியக் குளத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட நான் விரும்பவில்லை. தமிழ் இலக்கியத்தைப் பற்றி, இந்திய மொழி அறிஞர்கள் குறிப்பாக அண்டை மொழி அறிஞர்கள் மூலத்தமிழை சுட்டிக்காட்ட ஒரு சூழலை உருவாக்காமல், நம்மை நாமே பிறமொழிகளைப் படிப்பது போல் கூச்சலிடுவதே இதற்குக் காரணம். இதனால்தான், இந்த உண்மையைக் கூட சொல்ல இயலவில்லை. அதேசமயம் சங்க இலக்கியத்தில், அன்றைய தமிழர்களான இன்றைய மலையாளிகள், பாதிக்குப் பாதி உரிமை கொண்டாடலாம் என்று குறிப்பிட்டேன். இது மலையாள இலக்கிய வாதிகளுக்கும் எனக்கும் ஒரு நட்புப் பாலத்தை அமைத்தது. பின்னர் பேசிய வலம்புரி ஜானும் தனது அருமையான ஆங்கிலச் சொற்பொழிவில் இதைத் தான் குறிப்பிட்டார். இதனால் மலையாளப் படைப்பாளிகளே தமிழ்தான், தங்களுக்கும் மூல மொழி என்பதை எங்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்கள்.