பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 எழுத்தாணி ஊர்வலம்

எல்லாப் படைப்பும் மக்களுக்கே...

எழுத்தச்சன் நினைவகம், ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில், மலைகள் மண்டிய திருவூரில் வியாபித்திருக்கிறது. இந்த நிலத்தை, கேரள அரசே தனியாரிடமிருந்து கையகப்படுத்தி கொடுத்துள்ளது. இந்த வளாகத்தில், உள்ளரங்கம், வெளியரங்கம், பன்மொழி நூலகம், இலக்கிய அருங்காட்சியகம் உள்ளன. இதில் எழுத்தச்சனின் எழுத்தாணி, அவர் எழுதிய ஏடுகளோடு பூமணக்க, புகழ் மணக்க ஒரு சிற்பக்கல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விழாவின் இறுதி நாளில், இந்த எழுத்தாணி, கொட்டு முழக்கத்தோடு ஊர்வலமாகக் கொண்டு போகப்படுகிறது. ஊர்வல இறுதியில் ஒரு சின்னப்பிரசங்கம்.... நானும், வலம்புரிஜானும் ஒரிரு நிமிடங்கள் தமிழில் பேசினோம். இதேபோல் பிறமொழிப் படைப்பாளிகளும் தத்தம் மொழிகளில் பேசினார்கள். இந்த ஊர்வலத்தில் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய எழுத்தாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். இது எழுத்தச்சனை கடவுளாக்கும் முயற்சியல்ல. மாறாக அவரை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு ஊடக மென்று எம்.டி. வாசுதேவநாயர் எங்களிடம் தெளிவாக்கினார். எல்லாப் படைப்புகளும் மக்களுக்கே என்று சொன்ன கார்க்கீயின் மறுபதிப்பு முழக்கமாக இது எனக்கு தோன்றியது.

எழுத்தச்சனுக்கு ஏன் சிலை வைக்கவில்லை என்று நான் கேட்டபோது இப்படித்தானிருப்பார் என்று அனுமானிக்க முடியாதவருக்கு எப்படி சிலை வைப்பது என்று எம்.டி.வி, என்னை வினாவினார். உடனே, எனக்கு சிலை மயமான சென்னைக் கடற்கரைச் சாலைதான் நினைவிற்கு வந்தது கூடவே திருவள்ளுவர் சிலையில் பூணுரல் உள்ளே இருப்பது போல் ஒரு அனுமானம் ஏற்படுவதாய் கவிஞர் கண்ணதாசன் அப்போது உருவான திருவள்ளுவர் சிலைப்பற்றி கருத்து தெரிவித்ததும் நினைவிற்கு வந்தது. மலையாள இலக்கிய வாதிகளைப் போல் அல்லாது, நாம் உருவங்களைப் பிடித்துக் கொண்டு, உயிர்ப்புகளை விட்டு விட்டோமோ என்றும் எண்ணத் தோன்றியது.