பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உயிர்க்கொல்லி விளம்பரங்கள்

பாதிக்கப்பட்டவர்களின் ஆனது ஆச்சு போனது போச்சு என்ற மனப்பான்மையும் புரியும். இப்போது, இந்தப்பிரச்சினையை வழக்கறிஞர்களாலும் தீர்க்க முடியாது என்பதையும் புதிதாகத் தெரிந்து கொண்டேன். ஆகமொத்தத்தில், நாடுமுழுவதும் உள்ள ஏழை பாழைகள், விளம்பர மருந்துகளை வாங்கி கடுமையாகப் பாதிக்கப்படுவது அல்லது இறந்துபோவது தொடரும் என்பதும் புரிந்து விட்டது. சிந்தனையாளரான செந்தில்நாதன் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். என்றாலும், இதை சரிபார்க்கும் பொறுப்பு இந்த கட்டுரையின் வாசகர்களைப் பொறுத்தது. ஏனென்றால், இது வாழ்வுரிமைப் பிரச்சினை. தீயில் விழும் விட்டில் பூச்சிகள் மாதிரியான பிரச்சினை. வளைக்குள் நயவஞ்சகமாக நீளும் நரியின் வாலை உணவுப் பூச்சி என்று நம்பி, கவ்விப்பிடித்து அந்த நரிக்கே இரையாகும் நண்டுகள் பிரச்சினை மாதிரி...,

என்றாலும், எனக்குத் தெரிந்து இது ஒரு பெரிய அரசியல்சாசனப் பிரச்சினையல்ல. ஒரு மருந்து மாத்திரை குறித்த விளம்பரம், வாய்மொழியாகவோ, பிரசுரமாகவோ, ஒலி -ஒளி பரப்புகளாகவோ வெளிப்படுவதற்கு முன்பு, இந்திய மருத்துவவல்லுநர்களையும், அலோபதிமருத்துவ வல்லுநர்களையும் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் அமைக்கலாம். இந்தக்குழுவின் சான்றிதழ்கள் இல்லாமல், இத்தகைய விளம்பரங்கள் வெளிவரலாகாது என்று எச்சரிக்கலாம். இப்படி செய்தால், இது ஒரு ஆரோக்கியமான நடைமுறை ஆகும். மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வழிமுறையாகும். உயிர்களோடு விளையாடுபவர்களை தடுத்து, அப்பாவிகளை, இவர்களிடம் இருந்து மீட்டுவிடலாம். எல்லோரும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு ரசிக்கும் இந்தப் பட்டப்பகல் கொலைகார விளம்பரங்களை பார்த்துக்கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் கண்ணை மூடிக் கொண்டு இருப்பது இருக்கலாகாது. விளம்பரங்களை ஒழுங்குபடுத்த அனைத்துத் துறை வள்ளுநர்களையும் கொண்ட குழுக்களை தேசிய, மாநில அளவிலும் அமைப்பதோடு, இந்த முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர தக்க சட்டங்களை இயற்றவேண்டும்.

நவசக்தி வார இதழ் - 1999,