பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்

நிலவிய காலம், வடமொழி தேவ மொழியாகவும், தமிழ் மொழி நீச மொழியாகவும் கருதப்பட்ட காலம்.

இந்தக் கால கட்டத்தில் மறைமலை அடிகள், திரு.வி.க. போன்ற தமிழ் அறிஞர்கள் ஒரு அறிவுப் போராட்டத்தை நடத்தியபோது, அதே போராட்டத்தை மக்களுக்கு அறிவிப்பாகச் செய்தவர்களில் குறிப்பிடத்ததக்கவர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி. இந்தப் போராட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் எடுத்துச் சென்றவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். தமிழாசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் கேலிப் பொருட்களாக, இளக்காரமாக நினைக்கப்பட்ட காலம் அந்தக்காலம். ஆங்கில, கணித ஆசிரியர்களிடம் பயபக்தியுடன் பழகும் மாணவர்கள், அதை ஈடு செய்யும் வகையில் அவர்களின் நையாண்டிக்குச் சுமைதாங்கியானவர்கள் தமிழாசிரியர்கள். புதுமைப்பித்தன் கூட விவகாரத்தின் கனபரிமாணம் புரியாமல், தமிழாசிரியர் என்ற பாத்திரத்தை ஆண் சரஸ்வதி என்று கிண்டலாக வர்ணித்ததுண்டு. இத்தகைய காலக்கட்டம் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருந்தாலும், அது அரைகுறை உயிரோடு 1950ஆம் ஆண்டுவரை இருந்ததாக அனுமானிக்கிறேன்.

பேராசிரியரும் - மாற்றப்பட்ட வரலாறும்

இத்தகைய வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்ததில் பேராசிரியர் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவரின் கண்ணியமான தோற்றம்-கறாரான உரையாடல் இவற்றுடன் ஒரு மாபெரும் இயக்கத்தில் தன்னைத் துணிச்சல்ாக இணைத்துக் கொண்டது. தமிழகத்திலுள்ள தமிழாசிரியர்களின் கூன்களை நிமிர வைத்தது. ஒரு தமிழ்ப் பேராசிரியர் போராளியாகவும், இருக்க முடியும். என்பதை பயந்த சுபாவம் உள்ள நமது தமிழாசிரியர்களை நினைக்க வைத்தவர். மொழி பண்பாட்டு மக்கள் போராட்டத்தில் முதல் தலைமுறையான பேராசிரியர் அன்பழகனே. இரண்டாவது தலைமுறையில் டாக்டர் தமிழ்க்குடிம்கன், முனைவர்கள் டாக்டர் பொற்கோ, ச. மெய்யப்பன், இளவரசு, தி.சு. நடராசன், ஈரோடு தமிழன்பன், இன்குலாப், இரபீசிங், இராம குருநாதன் போன்ற தமிழாசான்கள் உருவாவதற்குக் காரணம். உயர் நிலைப் பள்ளி யில் தமிழாசிரியர்களை மற்ற மாணவர்களைப்போல் நையாண்டி செய்த மாணவர்கள்கூட கல்லூரிகளில் தமிழாசிரியர்களைச் சுற்றி வலம்வர வேண்டிய காலக் கட்டாயத்தை மாணவர்களிடையே உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பேராசிரியர்கள் டாக்டர். மு. வரதராசனார், டாக்டர் வ. சுபமாணிக்கம், ஆ.மு. பரமசிவானந்தம், அ.ச. ஞானசம்பந்தம், அன்பழகன், அரசு மணிமேகலை போன்றவர்கள்.