பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 27

வெளியே போகாத வெளிநடப்பு

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது நானே நடத்திய ஒரு வெளிநடப்பை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் தீவிரமான மாணவர் காங்கிரஸ்காரன். வட சென்னையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரியின் தமிழ் மன்றத்தில் பேராசிரியர் பேசுகிறார். அவர் வடவர், இந்தி என்று பேசத் துவங்கினால் உடனே வெளிநடப்புச் செய்ய வேண்டுமென்ற திட்டத்துடன் நான் முதல்வரிசையில் உட்கார்ந்து இருந்தேன். அவரும் பேசினார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பேசினார். நான் வெளிநடப்பு செய்தேன். ஒற்றைக் காங்கிரஸ்காரனான என்னுடைய போக்கை, கழக மாணவர் கண்டிக்கவில்லை என்றால், அதற்குள்ள ஒரேயொரு காரணம், அவர்கள் பேராசிரியரின் பேச்சில் அப்படியே மயங்கிப் போனதுதான். நான்கூட அவரது தர்க்கரீதியான, சுவையான, இயல்பான பேச்சில் கட்டுண்டு பின்வரிசையில் உட்கார்ந்து, அவர் பேச்சை ரசித்ததையும், பின்னர் சிந்தித்ததையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

பேராசிரியரின் சொற்பொழிவு ஆற்று நீரோட்டம் போன்றது. பாய்ச்சலும் இருக்கும், பசுமையும் இருக்கும். ஒரு தோழர், தனது குடும்பத்தினருக்குத் தான் கண்டதையும், கேட்டதையும் எப்படி மனம் ஒன்றிச் சொல்வாரோ அப்படி இருக்கும் அவர் பேச்சு. கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள் என்ற பாவனையில் அவர் பேச்சுத் துவங்குவதுபோல் எனக்குத் தோன்றும். ஆனால் பேசப் பேச அவர் தனது பேச்சை நிறுத்தி விடக் கூடாதே என்ற ஒரு விருப்பத்தை ஏற்படுத்திவிடும். கொண்ட கருத்தும் கோணாமல் மேடைப் பண்பாட்டையும் மீறாமல் இயல்பாக இருக்கும். அவரது பேச்சில் நான் சொக்கிப் போனேன்.

நோக்கும் போக்கும்

போராசிரியரின் நோக்கும், போக்கும் ஒரு துறவியின் தோரணையைப் போலத் தோன்றும். இப்படிப்பட்ட தோரணை பொது வாழ்வில் ஒருவரை வெற்றிகரமாக ஈடுபடுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பும், என்னுள்ளேயும் எழுப்பி இருக்கிறது. ஆனால் இந்தக் கேள்விக்கான திட்டவட்டமான பதில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூல் வெளியீட்டு விழாவில் எனக்குக் கிடைத்தது. அந்த விழாவில் பேராசிரியரின் உரை ஒரு தன்னிலை விளக்கமாக எனக்குத் தோன்றியது. அரசியலில் அவர் மேற்கொண்டிருக்கும் பரபரப்பற்ற நிதானமான போக்கு தற்செயலான ஒரு நிகழ்வல்ல என்பதும், அவர் தனக்குத்தானே அமைத்துக் கொண்ட ஒரு