பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 31

தெரிந்த தளத்தில் இருந்து போராட்டங்களை விசுவாசமாக நடத்தி வருகிறார்கள். அதேசமயம், ஒரு வரலாற்றுப் பார்வையோடு தங்களது பெண்ணியத் தளத்தை விரிவாக்க வேண்டுமென்ற சிந்தனை, இவர்களிடம் அதிகமாகக் காணப் படவில்லை. ஆகையால், எந்த முப்பாட்டிகள் மாராப்பு உரிமைக்காகப் போராடினார்களோ, அவர்களின் பேத்திகளால் நடத்தப்படாதவரை, பெண்ணுரிமைப் போராட்டம் முழுமையாகாது. இதுவரை மேட்டுக்குடி அல்லது நடுத்தட்டு பெண்களின் பிரச்சினையே பெண்ணிய பிரச்சினையாகத் திணிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் வாய்களிலும், பேச்சாளர்களின் வாய்களிலும் அடிக்கடி அடிபடும் வரதட்சணை பிரச்சினை இதற்கு எடுத்துக்காட்டு. இந்தப் பிரச்சினைதான் பெண்ணினத்தின் மிகப்பெரிய பிரச்சினைப் போல் பேசப்படுகிறது. ஒரு கத்துக்குட்டி கவிஞன்கூட, இந்த கொடுமையை எதிர்த்துத்தான் முதலில் கவிதை எழுதுகிறான். கிராமத்து பெண்களுக்கும், அடித்தளப் பெண்களுக்கோ இந்த விவகாரம் பெரிய பிரச்சனையே இல்லை. இதற்கு சமூகரீதியான காரணிகள் உண்டு.

சொத்துரிமை மறுப்பு

இந்தக் கிராமத்துப் பெண்களுக்கு, உரித்தான பெற்றோர் வழிச் சொத்துக்கள் மறுக்கப்படுகின்றன. புகுந்த வீட்டிலும் கணவன் சின்னவயதிலேயே இறந்துவிட்டால், இந்தப் பெண்கள் குழந்தைகளோடு அடித்துத் துரத்தப்படுகிறார்கள். இந்தச் சொத்துரிமை-மறுப்பு, இன்றைய பெண்ணிய போராளிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாதவை. காரணம் இவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்கள் பெரும்பாலும் சமூகத்தின் மத்திய தட்டில் உள்ள மாதச்சம்பளத்தினர். இவர்களுக்கு படிப்பும், வேலையும் மட்டுமே மூலதனம். வாடகை வீடும், வட்டி பெருகிய கடனுந்தான் பெற்றோர் கொடுக்கும் சீதனம்.

இதனால், இவர்களை, கணவன்மாரும், மாமியார்களும் கூட்டணி வைத்துக் கொடுமை படுத்துகிறார்கள். இது வன்முறையாகும்போது “ஸ்டவ்” வெடிக்கிறது. பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்களுக்கு கைகொடுக்க வேண்டியது, ஒரு போராளிப் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகும். ஆனால், இதுமட்டுமே, ஒரே நிகழ்வாக இருக்க முடியாது. இவர்களுக்கு சொத்துரிமையை வற்புறுத்த முடியாது என்பதாலேயே, பெண்களின் சொத்துரிமைப் பிரச்சினையை ஒப்புக்குப் பேசுவதும், நியாயமாகப் படவில்லை.

இழப்புத் தொகை இத்தகைய நடுத்தட்டுப் பெண்கள் பிரச்சினையை ஒதுக்கி