பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 33

வளத் தய்யா என்றும், பாட்டி வளத்தம்மா என்றும் அழைப்பட்டார்கள். பொதுவாக, இந்தப் பாட்டிகள், மகள் வழிப்பேரன் பேத்திகளை, தமது அருமை மகளும், அற்புதமான மருமகனும் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் என்று கருதுகிறார்கள். மகன் வழிப்பேரப்பிள்ளைகளையோ, தமது பைத்தியக்கார மகனும், தனது ஜென்ம எதிரியும் சேர்ந்து பெற்ற பிள்ளைகளாகவே கருதுவதுண்டு.

இப்படி ஒரு பெண் புகுந்தவீட்டிற்குப் போனபிறகும், பிறந்த வீட்டில் தொடர்ந்து சீருசெனத்திகளை வாங்கிக் கொண்டிருந்தாள். இவளும், இந்த சீர் மயக்கத்தில் தனக்குக் கொடுக்கப்படுவது. தனக்குச் சேரவேண்டிய சொத்திற்கான சொற்பமான இழப்பீட்டு தவணைத்தொகை என்பதை மறந்து விட்டாள். இதனால் தேவைப்படாத சூழல்களில்கூட, பிறந்த வீட்டு பெருமையைப் பேசினாள். இவளது தாலாட்டுப் பாடல்களில்கூட, கணவனை மென்மையாய் மட்டம்தட்டியும், உடன்பிறப்பை உச்சாணிக்குத் தூக்கியும் ஒலித்தாள். இப்படியாகவே, இந்தக் கிராமத்துப்பெண் சொத்துரிமை பற்றி நினைக்க முடியாத அளவிற்கு வளர்க்கப்பட்டாள். நடத்தப்பட்டாள். அக்கா, மாமியாரான கதை

இப்போதோ காலம் மாறிவிட்டது. அம்மான் என்ற தாய்மாமன் இப்போது முறைமாமன் ஆகிவிட்டான். இவனும் மாப்பிள்ளை முறுக்கில் அக்காவை மாமியாராகவே பார்க்கிறான். கிராமத்து சீருசென நேர்த்திகளும் குறைந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கைப்போராட்டமோ பெருகிக் கொண்டே போகிறது. கூடவே ஆடியோ வீடியோ கலாச்சாரம், செயற்கைத் தனமான திரைப்படங்கள், கிராமிய கட்டுமானத்தை, குடும்ப நிலையில் இருந்தே சிதைத்துக்கொண்டு இருக்கின்றன. மாப்பிள்ளை முறுக்கு மாமியாரோடு போச்சு என்பது பழமொழி. அதாவது மாமியார் இருப்பது வரைக்குந்தான் மருமகப்பிள்ளை, மனைவியை அடித்தோ, அடிக்காமலோ, பிறந்த வீட்டிற்கு அனுப்பி, வாங்கவேண்டியதையும், வாங்கக்கூடாததையும் பெறமுடியும். மாமியார் போய்விட்டால் ‘உன் பெண்டாட்டியை இங்கே ஏன் அனுப்புறே என்று மைத்துனர்கள் அந்தக் காலத்திலேயே கேட்டதாக பழமொழி ஆவணம் கூறும்போது, இந்தக் காலத்தைப்பற்றி கூற வேண்டியதில்லை.

இப்படி ஒரு பெண், தனது சொத்துரிமையை விட்டுக் கொடுத்த போதும், சொந்தக் காலில் நிற்கமுடியாமல் நொண்டியடிக்கிறாள். பிச்சைக்காரியைவிட கேவலமாக நடத்தப்படுகிறாள். வேறுவழியில்லாமல் உதைக்கிற காலுக்கே முத்தம் கொடுக்கிறாள்.