42
செல்லரிக்கும் கரையான்கள்
இருக்காது என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? ஏதாவது ஒரு நியாய விலைக் கடையிலாவது அநியாயம் நடக்காது என்று வாக்களிக்க முடியுமா? கள்ளச் சாராயம் இல்லாத ஒரேயொரு கிராமத்தையாவது காட்ட முடியுமா?, என்று என்னைக் கேட்டார். நான் பொய் சொல்ல விரும்பாது திக்கித் திணறியபோது ‘எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அல்லது எந்த ஆட்சி மாறினாலும் எங்கள மாதிரி ஏழைகள், அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்தாகணும். காக்கிச் சட்டைக்காரன் நாயே பேயே என்று பேசினாலும், நாங்கள் சிரித்து மழுப்ப வேண்டும். இந்த நாட்டில் ஒரு ஏழை, தன்னோட மரியாதையை காவுகொடுத்துத்தான், சுதந்திரமாய் திரியமுடியும். இந்த லட்சணத்தில் நான் எதுக்கு வாக்குச் சாவடிக்குப் போகவேண்டும்?’ என்று திருப்பிக் கேட்டார். நான் அந்த இடத்தை விட்டு திரும்பிப் பாராமல் போய் விட்டேன்.
அப்பட்டமான யதார்த்தம்
அந்த கிராமத்துக் கந்தல் குடிமகன் பேசியதுதான் இன்றைய அப்பட்டமான யதார்த்தம். நமக்கு வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தாலும், அந்த சுதந்திரத்தை அரசு இயந்திரம் இன்னும் மக்களுக்கு வழங்கவில்லை. பொதுவாக மேல்மட்டம் சரியாக இருந்தால் கீழ்மட்டம் சரியாகிவிடும் என்பார்கள். இது எதற்குப் பொருந்தினாலும் அரசு இயந்திரத்தின் கீழ்மட்டத்திற்கு பொருந்தவேபொருந்தாது. இதனால்தான் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் கீழ்மட்டக் கையூட்டைச் களைய வேண்டுமென்று முதல்வர் கலைஞர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது சம்மந்தமான கலைஞரின் வேண்டுகோள், ஏழையின் சொல்போல், நிச்சயம் அம்பலம் ஏறாது. ஏறுவதற்கும் விடமாட்டார்கள்.
மேல்மட்டத்தில் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், கீழ்மட்டத்தில் நூறு ரூபாய் கணக்கில் நிலவும் ஊழல்கள் என்பதும். பெரும்பாலானோருக்கு - இன்னும் சொல்லப்போனால், சாதாரண மக்களை நேரடியாகப் பாதிப்பது இத்தகைய சின்னச் சின்ன லஞ்சங்கள்தான். இந்த அப்பாவிகள் சந்திக்கும் சின்ன சின்ன அலுவலர்கள் சமூகத்தை செல்லரிக்கும் கரையான்கள். மேல்மட்ட ஊழலில் கவனம் செலுத்துவது போல் கீழ்மட்ட ஊழலில் கவனம் செலுத்தாத வரையில் சாதாரண மக்களுக்கு சுதந்திரமென்பது எட்டாக் கனியே.