பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது உயில் வரைவு.

வரலாற்றைத் திருப்பிய ஆன்மீகப் போராளியான வைகுண்ட சாமியின் சில கவித்துவ வரிகளை இங்கே திட்டமிட்டே எடுத்துப் போட்டிருக்கிறேன். அன்று அவர் சொன்னது இன்றும் நடைபெற வில்லை என்பதை நினைக்கும்போது, வேதனை ஏற்படுகிறது.

தனிப்பட்ட முறையில் என் வேதனைக்கு எந்தக் காரணமும் இல்லை. ஒரு பாட்டாளி வர்க்கத்தில் அதுவும் காய்கறிகளை வண்டியில் ஏற்றிச் சென்று, மாடு தள்ளாடும்போது, அந்த மாட்டை விலக்கிவிட்டு தானே ஒரு மாடாகி, வண்டியை ஒட்டிய ஒரு பாட்டாளியின் மகன் நான். இப்போது எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைவான வாழ்க்கையே. நாடறிந்த எழுத்தாளன். ஆயிரக்கணக்கான தோழர்களின் அன்பைப் பெற்றவன். சொந்த வீட்டோடும், காரோடும், இனிமையான மனைவி, மக்களோடும் எந்தக் குறைவு மின்றி வாழ்கிறவன். ஆனாலும், நான் வேதனைப்படுகிறேன். காரணம்

இளமையிலிருந்தே என் மனதை ஆட்டுவிப்பது சமூக க காரணிகளே. அன்று. ‘ஃபோர்த் பாம்’ எனப்படும் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, அப்போதைய அரசியல், சமூக நடவடிக்கைகளால் இந்தத் தமிழகம் எப்படி மனநோயாளி மாநிலமாக மாறக்கூடும் என்று நினைத்து வருந்தினேனோ, அந்த வருத்தம் என் விருப்பதிற்கு விரோதமாக நிறைவேறியிருக்கிறது. அன்று துவங்கிய சினிமாத்தனங்களும், தனிநபர் வழிபாடுகளும், லஞ்ச லாவண்யுங் களும் இன்று, பல்கி பரவி இருக்கிறது.

அன்றாவது, எங்கள் தலைமுறைக்கு ஒரு சமூகப் பிரக்ஞை இருந்தது. இன்றைய இளைய தலைமுறையைப்போல் நாங்கள் கணிப்பொறி வகையறாக்களிலும், பொது அறிவிலும், திறமையான வர்கள் அல்ல. ஆனால், எங்களுக்குத் தாய்மொழியான தமிழில் பிழையின்றி எழுதவரும். தமிழ்வழி கல்வியில் படித்தாலும், கல்லூரிக் காலத்திலேயே ஆங்கிலத்தில் தேறி நன்றாக எழுதவரும். ஆனால், இன்றைக்கு ஒரு பட்டதாரி மாணவருக்கு மூன்று வரி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத முடியவில்லை. அன்று சினிமா நடிகர்-நடிகைகள் மானத்தை பெரிதாக நினைத்தார்கள். இன்றோ முதலிரவைவிட வெளிப்படையான காட்சிகளைப் பார்க்கிறோம். தமிழ் செத்துச் செத்து, ஒரு புதுத் தொலைக்காட்சி தமிழ் உருவாகி வருகிறது அந்தக் காலத்து வேசிகள் எப்படி மாடங்களில் நின்று சீவி சிங்காரித்து கை ஆட்டுவார்களோ, அப்படிப்பட்ட அறிவிப்பாளத் தனங்கள் இருக்கின்றன. பெண்ணியம் வலுப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்கூட, பாவப்பட்ட பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக, தொழில் ரீதியில் கொச்சைப்படுத்தப் படுகிறார்கள்.