பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 63

மனோதத்துவ நிபுணர் அந்தத் திரைப்படத்தில் வருவது மாதிரி ஒருவரை குழந்தையாக்கி விட்டு, சிவலோகமோ அல்லது பரலோகமோ போய்விட்டாலும், அந்த மனநோயாளி சிறிது இடைவெளிக்குப் பிறகு சகஜ நிலைக்கு திரும்பி விடுவார். மனோதத்துவ நிபுணரின் ஆணைகள் கேட்கப்படும் வரைக்குமே, அந்த நோயாளி குறிப்பிட்ட பருவக்கட்டத்தில் இருப்பார். அந்த ஆணைகள் தொடர்ந்து கிடைக்காது போனால், நோயாளி மனோவசிய நிலையில் இருந்து பழைய நிலைக்கு தானாகவே மீண்டு விடுவார். இந்தச் சிகிச்சையையும் அதிக நேரத்திற்கு செய்ய முடியாது. அதாவது மனநோயாளியை அந்த நிபுணரின் மனோ ஆதிக்கத்தில் அதிக நேரம் வைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், குழந்தைப் பருவத்திற்கு கொண்டு போகப்பட்ட கதாநாயகி, ஆண்டுக்கணக்கில் குழந்தை போலவே ஆகிவிடுவதாக காட்டுவது அப்பட்டமான அறியாமை, அல்லது வேண்டுமென்றே காது குத்தும் முயற்சி. ஆனாலும், காதுகள் குத்தப்படாமல் ரசிகர்களின் மூளை குத்தப்படுகிறது.

பொதுவான பாமரத் தனங்கள்

பெரும்பாலான திரைப்படங்களில், பொதுவான பாமரத் தனங்களை நாம் பார்க்கலாம். வில்லன், கதாநாயகியையோ அல்லது அவள் தந்தையையோ கடத்திக் கொண்டு போவான். மறைவான ஒரு இடத்தில் கட்டிப் போடுவான். பிறகு துப்பாக்கி முனையில் அத்தனைச் சொத்துக்களையும் கதாநாயகி அல்லது அவள் தந்தை தனக்கு எழுதி கொடுத்ததாக ஒரு பத்திரத்தை காட்டி அதில் கையெழுத்து போடச் சொல்வான். கதாநாயகி மறுப்பாள் அல்லது கையெழுத்துப் போட்டு தியாகம் செய்வாள். இது அபத்தத்திலும் மோசமான அபத்தம். ஒருவர் தனக்கு உரிமையான சொத்துக்களை பிறருக்கு கொடுக்க வேண்டுமென்றால், பத்திரம் எழுதி கையெழுத்து போட்டால் மட்டும் செல்லாது. எந்தச் சொத்தையும் அரசு பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். விற்பவர் அங்கே சென்று சார்வு பதிவாளர் முன்னால் கையெழுத்துப் போடவேண்டும். அவர் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும். நிலைமை இப்படி இருக்கையில், ஏதாவது ஒரு பத்திரத்தில் ஒரே ஒரு கையெழுத்து போட்டுவிட்டால் எல்லாம் முடிந்து விடும் என்பதுபோல், நமது சினிமாக்காரர்கள் இந்தப் பொய்யை பரவலாக பரப்பி விடுகிறார்கள்.

திரைப்படங்களில் பொதுவாக வரும் இன்னொரு

பாமரத்தனமான கருத்து. ஒருவர் தலையில் அடிபட்டு பைத்தியமாகத் திரிவார். இடைவேளைக்குப் பிறகு அதே