பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

11



சாம்ராஜ்ய மென்றால் என்ன ?

ஒன்றாக சேர்க்கப்பட்ட பல நாடுகளின் தலைமை: அல்லது வாள் வலிமையால் ஒன்று சேர்க்கப்பட்ட பல நாடுகளைக் கொண்ட ஆட்சி, அல்லது பல சிற்றரசர்களால் மனம் ஒப்பி கெளரவமாக ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு தலைமையின் கீழ் அன்பு முறையில் இயங்கும் அரசு, மக்களையாள்வது மன்னன் கடமையென்பதும், மன்னனுக் கடங்கி நடப்பது மக்கள் கடமை யென்பதும் வல்லோன் வகுத்த வழி என்று மக்கள் அறியாமையால் ஒப்புக்கொண்ட ஒரு முறை, பொறுப்பான மன்னர்களால் முதலில் அன்பாக நடத்தப்பட்டு, பிறகு அதே மன்னர்களால் சில சுட்டிக்காட்ட முடியாத காரணங்களால் யதேச்சாதிகாரத் தன்மையைக் காட்டியபோது, எதிர்க்க சக்தியற்றுக்கிடந்த மக்களையடக்கியாண்ட முறை. ’ஆண்டவன் விட்ட வழி’ பழைய பாவத்தின் விதை, இப்படி நாம் அடங்கித்தீர வேண்டிய நிலை ஏற்பட்டதென்ற அறியாமையினாலே ஒரு அரசின் இரும்புப் பிடியிலே அகப்பட்டுக் கொண்ட மக்களடங்கிய ஆட்சியையே நாம் பொதுவாக சாம்ராஜ்யங்கள் என்கிறோம்.

அதிகாரத் தொனியை ஆயுதத்தால் எழுப்பி மக்களையடக்கியாள வேண்டுமென்ற நிலையிலே இருந்த நாடுகளை மாத்திரமன்னியில் பரோபகாரத்தால் பாரையாண்டு அன்பு நெறியும் அறவழியும் காட்ட வேண்டு மென்ற முடிவில் ஆண்ட மன்னர்களுக்குட்பட்டிருந்த நாட்டையும் சாம்ராஜ்யம் என பொதுவாக அழைக்க கடந்த கால சரித்திரங்கள் இடந்தருகின்றன. மண்ணாசையாலும், மத வெறியாலும் மடமை யாலும் சூழ்ச்சியாலும் மறைந்துவிட்ட சாம்ராஜ்யங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.