உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

19



யும் செலவிடவில்லை. மாற்றாரைத் தடுத்து நிறுத்த வேண்டிய மன்னன் தன் காலடியில் வீழ்ந்தான் என்றால், எட்டாத இமயத்தின் சிகரத்தைக் குட்டிச்சுவரென எண்ணினான் அலெக்சாண்டர்.

குகைக்குள் புலியும், குகைவாயிலில் குள்ள நரியும் இருப்பதை அறிய அலெக்சாண்டரால் எப்படி முடியும். எக்காளமிட்டான், இனி எங்கும் எதிரிகளே இல்லையென இறுமாப்படைந்தான், அந்த எண்ணத்திற்கு விரோதமாக இந்தியாவின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த ஜீலம் சீனப் நதிக்கரைகளுக்கிடையே புருஷோத்தமன் வீரத்தைக் கண்டான். புருஷோத்தமன் படை சிறியது தான். ஆனால் அவன் வீரம் காட்டாறெனக் கிளம்பியது. தடுப்பாரற்ற மதவேழம்போல் வீறுகொண்டெழுந்தான். தனக்கு எல்லேக்கோட்டில் நடந்த விருந்தை நினைத்து உளம்களித்த வீரன் அலெக்சாண்டர் இங்கே வாள் முனை தனக்கு விருந்தாக்கப்படுவதையும் தன் வீரத்தின் தராதரத்தையறிய தைரியமாக படைதிரட்டி எதிர்த்த மாவீரன் புருஷோத்தமனின் பராக்ரமத்தைக் கண்டு மகிழ்ந்தான். புருஷோத்தமன் தோற்றானெனினும், அலெக்சாண்டரை எதிர்த்து நின்ற ஒன்றினாலேயே வீரனென வரலாற்றால் புகழிப்படுகின்றான். அவனது வீரத்தைக் கண்ட கிரேக்கத்தின் காளை அவனிடமிருந்து வென்ற நாடுகளை மீண்டும் அவனுக்கே நல்கி நல்லாசி கூறினன்.

முதலிலே வரவேற்பைக் கண்டான். விருந்தை சுவைத்தான். பிறகு வாளைக் காண்டான். இன்னும் தெற்கே போகப்போக பிணங்களைக் காணவேண்டி வரும் என்றஞ்சியதின் காரணத்தாலோ என்னவோ சீனப் நதியைக் கடந்து தெற்கே வரவில்லை அலெக்சாண்டர்.