அலெக்சாண்டரைக் கொண்டு சூள்முடித்த சாணக்கியன்
மூவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் ஒருவராலும் காப்பாற்றி வைக்கப்படாதது. தென்னாட்டில் வலிமை பொருந்திய மூன்று வல்லரசுகள் தன்னேரில்லாது ஆண்டு அலைகடல்மேல் தங்கள் மரக்கலங்களை செலுத்தி வேற்று நாட்டில் தன் விளைப்பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நேரம்தான் வடக்கே ஒரு ஏகாதிபத்தியத்தை உண்டாக்க வேண்டுமென ஒரு ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே செய்து முடித்தான். கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் தோன்றிய அம்மாபெரிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டுமென்று வேறோர் ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே அதை அழித்தும் விட்டான்.
ஆரியம் எந்த சக்தியாலும் அழிந்துபடாமலிருக்க அரசனையும் அவனுடைய செங்கோலையும் காவல் வைத்தே ஆரியத்தை அரியாசனமேற்றினான், சிறந்த ராஜதந்திரியும் ஆரியகுல மக்களின் குலதெய்வம் என்று போற்றப்படும் சாணக்கியன். தன் உச்சியிலிருந்த ராஜ தந்திரங்களத்தனையையும் சேர்த்து அர்த்த சாஸ்திரமாக எழுதி மெளரிய சாம்ராஜ்யத்தின் முதல் முடிவேந்தனை சந்திரகுப்தனிடம் ஈட்டிபோல் நீட்டிய கெளடில்யன் என்பவன் இவன்தான். ஆரியர்களுக்கு தனித் தனியாக எற்படும் சுயநலத்தைவிட தன் இனம் வாழவேண்டுமென்ற பொதுநலமே மிகுந்தவர்கள் என்பதற்கு இவன் ஒர் தலைசிறந்த உதாரண மனிதனாக விளங்குகிறான்.