சி. பி. சிற்றரசு
35
நையாண்டி செய்ய பல பகைவர்கள் விரித்த கைகளோடு நின்றனர். போர்தொடுக்காமலே புறமுதுகுக் காட்டுவதென்பது காரவேலன் என்ற வீரனுக்கும் கலிங்க மண்ணுக்கும் சகிக்கமுடியாத அவமானமாகும். ஆகவே வாளேந்தி நிணக்களம் குதித்தான் காரவேலன். படைகள் கோட்டையை விட்டு வெளியே கிளம்பின. பரம்பரை பரம்பரையாக வீரத்தைத் தாங்கி சலித்துப் போன கலிங்கப் படை ஒரு பக்கம், மற்றோர் பக்கம் மெளரிய வீரன் அசோகனின் படைகள்.
கலிங்கப் போர்
வரலாற்று கீர்த்தி வாய்ந்த கலிங்கப் போர், அன்புக்கும், அழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை அவனிக்கு ஒதிய போர். செத்தவனுக்கும் சாகடித்தவனுக்கும் உலகில் உள்ள தராதரத்தைக் காட்டி, முடிவில் யாருக்கும் ஒன்றுமில்லை என்ற விடையை அளித்த போர். அரசன் சொல்லால் ஆன்மாவை இழந்த நிரபராதிகளுக்கும், அரசன் அரியாசனத்தில் அழகுக்காக செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிங்க உருவுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்ட போர். மன்னன் மனம் மாறிய போர். பலர் இறப்பால் இரக்கம் இன்னதென்றறியச் செய்த பயங்கரப்போர். ” இலையுதிர்வதைப்போல் மக்கள் மடிகிறார்கள் ஆனால் அந்த இலைகளை தனக்கு வேண்டாதபோது உதிர்ந்துவிட்ட மரமும் என்றாவது ஓர் நாள் அழியக்கூடியதே. அதேபோல் உனக்கு வேண்டாத மக்களை இலைகளென உதிர்க்கிறாய் இந்த ரணகளத்தில், ஆனால் இவைகளைத் தாங்கி ஊட்டி வளர்த்த நீயும் ஒரு நாள் விழவேண்டியவனே என்பதை எண்ணிப்பார் மன்னனே ", என்ற பேருண்மையைக் காட்டிய கலிங்கப் போர்.