உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சரிந்த சாம்ராஜ்யங்கள்


உள்ளத்திலே பேராசையை எழுப்பி இந்தியாவை கொள்ளையிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது. அன்றந்த செல்வக் குவியலின் எதிரிலே நின்ற அரேபியர்களின் நாவில் நீர் ஊறி கைகள் திணவெடுக்கத் தொடங்கின. அவர்கள் உடலில் ஒடிக்கொண்டிருந்த ரத்தத்தின் சென்னிறத்தைவிட இந்தியாவில் கிடைக்கும் மாணிக்கக் கற்களின் சென்னிறமும் ஜொலி ஜொலிப்பும் அதிகமென எண்ணினர். ஒரு துளி ரத்தத்தால் ஒரு அரேபிய குடும்பம் வாழ முடியாமல் தத்தளிப்பதைவிட உடல் ரத்தம் முழுவதையும் ஈடுசெய்தாவது ஒரே ஒரு மாணிக்கத்தை, மரகதத்தை, கோமேதகத்தைப் பெற்றால் ஒரு சங்கிலித்தொடர்புள்ள அரேபியப் பரம்பரையே வாழ்ந்துவிடலாம் என்றெண்ணினர்போலும். அதற்காக அவர்கள் போட்ட மூலதனம், சில ஆட்கள், சில ஆயுதங்கள், மன உறுதி, கொஞ்சம் கடுமையான உழைப்பு, இவ்வளவுதான்.

கஜனியின் கடைசி படையெடுப்புதான் சோமநாதபுரம், ஆலையச் சிதைவு, பொருள் சூறை, மக்கள் பீதி நகரம் பாழ் எல்லாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதைப்போல் பாரமீடா என்ற அரசனால் சரியான அடி வாங்கி தனது பெரிய படையை நாச மாக்கிக்கொண்டு குறுக்கு வழியாக பாலைவனத்திலே நுழைந்து தன்னை நம்பி வந்த படைகளை ஆங்காங்கே சிதறவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டான். இதோடு கஜனியின் பொன்னாசையும் பொருளாசையும் பொசுங்கி மாண்டது. எனினும் சோமநாதராலையத்தின் சிரித்த சிலை சீரழிந்து சாய்ந்தது. ஒருவன் பேராசையால் அழிக்கப்பட்ட நகரம் பல்லாயிரம் பேர்களால் செப்பனிட முடியாமல் பல நூற்றாண்டுகள் கிலமாய்க்கிடந்தது.