உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

3


 அவைக்களத்தில் அவமதிக்கப்பட்டோம் என்ற ஆத்திரத்தால் அலைகடல் கடந்து ஆயுதமேந்தி வந்தவனுக்கு பூரண கும்பமும் புலால் விருந்தும் அளித்து உள்ளே அழைத்து வர, தன் பரம்பரைக்கு புராதனமாக வாழ்வளித்து வந்த புரவலர்களின் கோட்டைச் சாவியைக் கொடுத்துத் தானும் புதுப் பதவியேற்றதால் புலியெனப் பாய்ந்த மக்களால் நார் நாராகக் கிழித்தெறியப் பட்ட சாம்ராஜ்யங்கள்.

தான் ஆள முடியாவிட்டால், வேறு எவனேயும் ஆளவிடக் கூடாதென்ற பொறாமைத்தீயில் குதித்துவிட்ட மன்னர்களின் அழிவுக்குப்பின் தானாகவே அழிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், நாட்டைக் காப்பாற்றப் படையெடுத்து, கோட்டையின் மேல்தளத்தில் காமக் காற்றால் அசைந்தாடிக் கொண்டிருந்த சரசவல்லிகளிடம் தன் மதியைப் பறிகொடுத்து மீளாத காதலால் ரணகளத்திலிருந்து மீள முடியாமல் மண்மேடான சாம்ராஜ்யங்கள். நாட்டின் எல்லைக் கோடுகளை விரிவாக்கவும், மதக் கோட்பாடுகளைத் திணிக்கவும், மத குருவின் ஆசியைப் பெறவும், மண்டலம் பலவற்றிற்கு மன்னர் மன்னன் என்ற பட்டம் பெற வேண்டுமென்ற பேராசையும் குடிகொண்டு படையெடுத்து ஜெகமஞ்ச போரிட்டு, எதிரிகள் தன்னிடம் சரணாகதி யடையாமுன்னமே பாவையர்கள் மையலில் விழுந்து புரையோடிப்போன சாம்ராஜ்யங்கள்.

"மக்களையடக்க நான், மக்களின் உள்ளத்தையடக்க மதகுரு, இவ்வுலகுக்கு அதிபன் நான், அவ்வுலகுக்கு அதிபர் அவர், இந்த இரண்டுக்குமிடையே இங்குமங்குமாக பறந்துசெல்லும் அணுக்கள் மக்கள், பொருள் என்று கேட்டால் போர்முரசு கொட்டுவேன்.