பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சரிந்த சாம்ராஜ்யங்கள்


வாய்திறந்தால் குதிரைக் காலடியால் அவர்கள் வாயிலிருந்து குறுதியைக் காண்பேன், எதிர்த்தால் இருட்டறை, சிந்தித்தால் சித்ரவதையோடு சிறைவாசம், ஏன்? என்று கேட்டால் ஆள்கொல்லி சட்டம், இனி என்னை எவனுமே அணுகமுடியாது. என் பொண்வண்டு தவிர” என்று பொற்கொடியைத் தாவி பூவிரித்த மஞ்சத்தில் சாய்ந்திருந்த மாமிசமலையை, மக்கள் வேங்கையென வரிப்புலியென பாய்ந்து அந்தக் குணக்கேடனின் உதிரத்தைத் தெளித்து வெற்றிவிழா கொண்டாடிய போது உமிழ்ந்த உதிரவாயோடு வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள்.

பகுத்தறிவு பேசியதால் பாய்ந்து சீறிய பார்த்திபன், விளக்கம் கேட்டதால் வேதனையை வேலெனப் பாய்ச்சிய வேந்தன், சிந்திக்கத் தொடங்கியதால் சினம்கொண்ட சிங்காதனத்தான், வேத தூதர்களின் விஷவேலியைக் காத்த வெண்சாமரத்துக்குடையோன், கடவுள் சொன்னதா கற்பனையா என்று கடாவி அறிவின் கபாடக் கதவுகளைத் திறந்துவிட்ட தீனர்களை தீயில்தள்ளிய தீயர்கள், ஆண்டவனே வணங்கப் பணமேன் என்ற அறிவுரையை எழுப்பிய பகுத்தறிவு தூதர்களை பட்டப் பகலில் பகிரங்க மேடையில் நிறுத்திக் கொன்ற பாவிகள்.

உண்டு கொழுத்து வீணைவாசித்து மாதர் மையலில் சிக்கி, மதுவில் குளித்து, பதிகம்கேட்டு, பானம், பாவை, பதிகம் பக்தி இவைகளே பரமண்டலத்தின் திறவுகோல் என்ற மமதையில் திளைத்து எதிரிகளின் முற்றுகையை துளசித் தழைகளால் தடுக்க முடியும் என்று வேதியர்கள் சொன்ன யோசனையாலும், வேள் விழியாளின் அணப்பிலிருந்து விடுபட முடியாத உற்சாகத்தாலும்,