பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருமைப்பாடு பேசுகின்ற மூடிமறைப்பான்களைப் பற்றியும், அரசியல் திருடர்களைப் பற்றியும், ஏழைகளை உறிஞ்சிச் சாப்பிடுகிற எத்தர்களைப் பற்றியும், இங்கே நாம் பேச முன்வரவில்லை. இங்கே இனமுறையில், குமுகாய வகையில், இத்தனை வேறுபாடுகளையும் அப்படியே வைத்துக் கொண்டு, வளரவிட்டுக் கொண்டு, ஆண்டுக்கு ஆண்டு, 'குடியரசு நாள்', 'விடுதலை நாள்' கொண்டாடுகின்ற கொள்ளைக்காரர்கள், ஏமாற்றுக்காரர்களைப் பற்றித்தான், நாம் இங்கே சில செய்திகளை மனம் விட்டுப் பேசியாகல் வேண்டும்.

தன்னுரிமை பெற்றும் இன இழிவு நீங்கவில்லை!

இந்தியா தன்னுரிமை (சுதந்திரம்) பெற்று முப்பத்து ஏழு ஆண்டுகள் ஆகியும், நமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளும் மாறுபாடுகளும், சாதியிழிவுகளும், ஏழைத் தொழிலாளர்களை உறிஞ்சிக் கொழுக்கும் உன்மத்தங்களும் சிறு அளவிலேனும், ஒரு கடுகு அளவிலேனும், குறையும்படி, நாம் ஏதாவது செய்துள்ளோமா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் அரசியல் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் திருவிழாக்கள், புரையோடும் பொழுதுபோக்குகின்ற கலைநிகழ்ச்சிகள் என்று இவைதாமே அதிகமாகிக் கொண்டுவருகின்றன. அரசியல் சார்பான, அதிகாரத் தொடர்பான சட்ட திட்டங்கள் தாமே திருத்தப்பெற்றும், புதியனவாக அமைக்கப்பெற்றும் வருகின்றன.அதிகாரப் பகிர்வுகளுக்கும், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பச்சைப் பிடுங்கல்களுக்குந்தாமே நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். தன்மான அடிப்படையில், குமுகாய முறைகளில் ஓர் ஒழுங்கையும், ஏற்றத்தாழ்வின்மையையும் மிகப் பலருக்குள்ள இழிவு நீக்க முறைகளையும் நோக்கி, நாம் சிறு அளவிலேனும் முன்னேறியிருக்கின்றோமா? இல்லையே! பின், எப்படி இத்தகைய போராட்டங்களையெல்லாம் நாம் தவிர்த்துவிட முடியும்? நிலைமை அப்படியே இருக்குமானால், நம்மிடம் கொலை, குத்துக்கள், வெட்டுகள் தாமே மிகுதியாகும்.

போராட்டம் தேவை!

ஓரினத்தவர், அதுவும் மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்றே பேருள்ள, மிக மிகச் சிறிய அளவினரான, பார்ப்பனர், தம்மை மேலான சாதியாக, பிராமணராகக் கூறிக் கொண்டு, பிற மக்களைத் தாழ்ந்த இழிந்த சாதியராகக் கூறிப் பெருமை பேசுவதும், அதற்கான உடல் அடையாளங்களை இட்டுக்கொள்வதும், எல்லாப் பொது மக்களும் சரிசம உணர்வுடன் புழங்க வேண்டிய இடங்களில் தாங்களே போய் அடைத்துக் கொண்டு, சண்டிமாடுகள் போல் பிறர்க்கு வழி விடாமல் தடுப்பதும் நம் கண்ணெதிராகத் தாமே நடந்து கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றி நம் அமைச்சர்கள், தலைவர்கள் எனப் பெறுவோர் எவரேனும்

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/10&oldid=1164312" இலிருந்து மீள்விக்கப்பட்டது