பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மவர்களிடந்தாம் அத்தகைய முயற்சிகள் செய்யப்படவேண்டும். பார்ப்பனீயத்தை நாம் தவிர்க்க விரும்புகிறோம் என்றால், அதன் மேலாளுமையை நீக்கப் பாடுபடுகின்றோம் என்றால், அந்தப் பார்ப்பனர்களால் உருவாக்கப் பெற்ற சாதிகள் நமக்கு எதற்கு? அந்த உணர்வை நாம் விலக்க வேண்டாமா? அதை நாம் எப்படி நீக்குவது? அது மிகவும் தீங்கான ஒன்று, நம்மை மேலும் மேலும் வேறுபடுத்திக் கொண்டு, ஒற்றுமையடைய விடாமல் தடுக்கின்ற ஒன்று, நம் முன்னேற்றத்திற்குத் தடையான ஒன்று என்று தெரிந்திருந்தும், அதைப் பொருளியல் முன்னேற்றத்தின் பொருட்டாகத்தான், நாம் ஏன் அழிக்காமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?


முதலில் நாம் அறிவின் மேலும் உழைப்பின் மேலும்
நம்பிக்கை வைக்க வேண்டும் !

நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள் தங்களின் இன ஒற்றுமையினாலும், அறிவின் மேல்வைத்த நம்பிக்கையினாலும், கூட்டுணர்வினாலும் கடந்த ஈராயிரமாண்டுகளாக இந்நாட்டில் தொடர்ந்த ஒரு பிழைப்பை-வாழ்க்கையை நடத்தி வருகிறார்களென்றால், நூற்றுக்குத் தொண்ணுற்றேழு பேராக உள்ள நாம் ஏன் நம் அறிவின் மேல் அவநம்பிக்கையும், உழைப்பின்மேல் நம்பிக்கையின்மையும், ஒற்றுமையின் மேல் ஐயமும் கொள்ளுதல் வேண்டும்? உண்மையிலேயே பார்ப்பான் நம்மை அடிமைப்படுத்தவில்லை; பார்ப்பனீயந்தான் நம்மை அடிமைப் படுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாமே நம்மைத் தாழ்த்திக் கொள்ளலாமா?.

அவன் சாதிப் பெருமைக்காகத்தான் தன்னைப் 'பிராமணன்' என்று சொல்கின்றான் என்றால், நாமும் ஏதோ ஒரு காரணத்திற்காக, ஏன் நம்மைப் பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்றெல்லாம் கூறிக்கொண்டு, அவன் நம்மைச் 'சூத்திரன்' என்று சொல்லாமற் சொல்வதற்குப் பொருளேற்படுத்திக் கொடுக்க வேண்டும்? அவன் தன்னைப் பிராமணன் என்று சொல்வதால், நம்மைச் 'சூத்திரன்' என்று நாம் ஒப்புக் கொண்டதால், அவனை நாம் 'பிராமணன்' என்ற நிலைக்கு உயர்த்தி விட்டோம் அல்லது அவன் தன்னைப் 'பிராமணன்' என்று கூறிக் கொள்வதை நாமும் ஏற்றுக் கொண்டோம் என்பதாகாதா? 'சூத்திரன்’ என்றால் என்ன? 'பிற்படுத்தப்பட்டவன்' அல்லது "தாழ்த்தப்பட்டவன் என்றால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? 'குப்பை' என்றால் என்ன? அல்லது 'தள்ளப்பட்டது' 'ஒதுக்கப்பட்டது' என்றால் என்ன? எல்லாம் தன்மையில் அல்லது பொருளில் ஒன்று தானே! சொல்லில் தானே மாறுபாடு இதை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/13&oldid=1164315" இலிருந்து மீள்விக்கப்பட்டது