பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்குள் ஏன் ஒற்றுமையில்லை ?

மேலும் பார்ப்பான் என்று அவனை நாம் சொல்கிறோம். அவன் இனத்துக்குள் 'சாதிச் சண்டைகள், குலச்சண்டைகள், கோத்திரச்' சண்டைகள் தோன்றுவது உண்டா? ஒர் அய்யரும் அய்யங்காரும், அல்லது ஒரு கோத்திரமும் இன்னொரு கோத்திரமும் முட்டிக்கொண்டன என்று நாம் கண்டிருக்கிறோமா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள அவர்கள் அப்படியிருந்தால், நூற்றுக்குத் தொண்ணுற்றேழு பேராக உள்ள நாம் ஏன் ஓர் அறுபது விழுக்காடேனும் அவர்களைப் போல் ஒற்றுமையாயில்லை?

நம்மை நாமே இழிவுபடுத்திக் கொண்டு,
பழிகளை அவன்மேல் போடுகின்றோம்!

நமக்குச் செருக்கு அதிகம்; திமிர் அதிகம்; ‘சாதி வெறி மிகுதி!நமக்குள்ளேயே நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்தப் பார்க்கின்றோம்; கெடுக்கப் பார்க்கின்றோம்; ஒருவர் முதுகில் ஒருவர் குத்தப் பார்க்கின்றோம்; அடித்துக் கொள்கின்றோம். பார்ப்பான் ஏற்படுத்திக் கொடுத்த சாதியை விடாமல் நாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே, நாம் நம்மை முன்னேற்றிக் கொள்ளப் பார்க்கின்றோம். அவன் நம்மை அழைத்த இழிவுப் பெயராலேயே நாம் சலுகைகளையும், பொருள் நலன்களையும் துய்க்கப் பார்க்கின்றோம். அப்படித் துய்த்துக் கொண்டே நாம் நம்மை முன்னேற்றிக் கொள்ள விரும்புகின்றோம். அதற்குப் பல நொண்டிச் சாக்குகளையும், நொள்ளைக் காரணங்களையும் கூறி, வெட்கமில்லாமல், குமுகாயத்தின் அடிப்படிகளில் நின்று கொண்டு, மடி விரித்துக் கேட்கின்றோம். நாம் இவற்றாலெல்லாம் எப்படி முன்னேறிவிட முடியும்? இழிவுகளைப் போக்கிக் கொள்ள இயலும்? நம்மை நாமே இழிவுபடுத்திக் கொண்டு, பழிகளை அவன் மேல் போடுகின்றோம்; அவன்தான் நாம் செய்து கொள்ளும் இழிவுகளுக்குக் காரணம் என்று கூக்குரலிடுகின்றோம்.

பார்ப்பனரின் முன்னேற்றத்திற்கு அவர்களின்
இனநல முன்னேற்றக் குணங்களே காரணம்!

இனி, அறிவு முன்னேற்ற வகையில், பார்ப்பனர் தங்களுக்குள் எப்படி ஒருவர்க்கொருவர். கைகொடுத்து முன்னேற்றி விட்டுக் கொள்கின்றனர்! எப்படி ஒருவரை ஒருவர் தூக்கி விடுகின்றனர்! ஆ! ஒரு சிறு திறமை எங்கேனும் ஓர் எளிய ஏழைப் பார்ப்பானிடம் இருந்தாலும், என்னமாய் அதைப் பெரிதுபடுத்தி, விளம்பரப்படுத்தி அனைவருக்கும் தெரியச் செய்து, அவனுக்குத் துணை நின்று, அவன் அறிவு முயற்சிக்குத் தூணாக இருந்து தோள்கொடுத்து, எப்படியெல்லாம் அவனை ஆதரித்துப் போற்றுகின்றனர்! அவர்களில் எவராவது ஒருவரை ஒருவர்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/14&oldid=1164316" இலிருந்து மீள்விக்கப்பட்டது