பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கொள்கின்றோம். அவன் நம் சாதியானாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் அவ்வாறு இல்லாதவிடத்து அவனை வெறுக்கிறோம்; பொறாமைப்படுகிறோம்; குறைத்து மதிப்பிடுகிறோம். இன்னும் அவனிடத்தில் உண்மையிலேயே ஏதாவது ஒரு குறை தென்படாதா என்று, அவன் அறிவு நிலைகளையும் நடவடிக்கைகளையும் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்க்கின்றோம். ஒன்றாவது தென்படவேண்டுமே என்று அவன் குணநலன்களைத் தெள்ளி, அலசிப் பார்க்கின்றோம், அவ்வாறு ஏதாவது ஒரு குறையோ நெகிழ்ச்சியோ தென்படுமாயின் அதனையே பெரிதுபடுத்தி, அதனுடன் நம் கற்பனையையும் எரிச்சலையும் கலந்து ஏதோ ஒரு கதையை உருவாக்கிக் கொண்டு, அதையே அனைவர்க்கும் தெரியச் செய்து, பழி தூற்றுகிறோம், அவனை இழிவுபடுத்துகிறோம். இத்தனை நிலைகளும் சாதியினால் வருகின்ற மனவுணர்வுகள் என்பதைப் பிறர் கண்டுகொள்ளதபடி நாம் எச்சரிக்கையாகவே இருந்து செயலாற்றுகிறோம்.

சாதியே நம்மை முன்னேறவிடாமல் தடுக்கிறது!

எனவே, சாதிநிலை நம்மை ஒருவர்க்கொருவர் முன்னேற விடாமல் செய்யும் அடிப்படையான தாழ்வுணர்வாக-வீழ்வுணர்வாக இருக்கின்றது. இந்த இழிவானநிலையினின்று - நம்மை மீண்டும் மீண்டும் குழிக்குளேயே, சேற்றுக்குள்ளேயே புதைத்துக் கொள்கின்ற மனநிலையினின்று நாம் எவ்வாறு விடுபடுவது? நம்மையே நாம் உணர்ந்து கொண்டாலன்றோ, விடுவித்துக் கொண்டாலன்றோ, சாதியுணர்வும் நம்மிடமிருந்து கழலும். சாதியிலிருந்து நாமே விலகாத வரையில், சாதி நம்மைவிட்டு விலகாது. சாதி வேறெங்கும் வெளியில் இல்லை. அது நம் உள்ளத்துக்குள்ளேதான், அறிவுக்குள்ளேதான் உணர்ச்சிக்குள்ளேதான் இருக்கிறது. அங்குதான் அஃது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, நாமே அதை வெளியேற்றாத வரையில், அதுவாகவே நம்மை விட்டுப் போய்விடாது உண்மையாகச் சொல்வதானால், நாம்தாம் அதை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கின்றோம்; நாம்தாம் அதற்கு நீரூற்றுகிறோம்; எருப்போடுகிறோம்; காவல் செய்கின்றோம். அது மடிந்து போவதில் நமக்கு விருப்பமில்லை. அஃது இல்லாமற்போனால் நமக்குப் பெருமையில்லை, வாழ்வில்லை என்று கருதிக்கொண்டு, அதை நாம் காப்பாற்றி, மாய்ந்துவிடாமல் வாழ்வித்துக்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் அது எப்படி இல்லாமல் போய்விடும்?

உண்மையிலேயேசாதிநம்மைப்பிடித்துக்கொண்டிருக்கவில்லை;
நாம்தான் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையாகச் சொல்வதானால் சாதி நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை; அதைத்தான் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம். அஃது இல்லையானால் நமக்கு வாழ்வில்லை என்று கருதி, அதைத் தலைமுறைச் சொத்தாக வைத்துப் பேணிப்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/16&oldid=1164319" இலிருந்து மீள்விக்கப்பட்டது