பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருமை பேசி வருகிறோம். அதில் ஒருவகைக் கவர்ச்சி தெரிகிறது; ஒரு போலிப் பெருமை தென்படுகிறது. அதன் விளைவுகள் நம் வாழ்க்கைக்குப் படிக்கட்டுகளாக அமைகின்றன என்று தவறாகக் கருதுகின்றோம். எந்த வகைப் பெருமையோ சிறப்போ இல்லா நமக்கு அஃது ஒருபோலிப் பெருமை எண்ணத்தையும் சிறப்புச் செருக்கையும் உருவாக்கிக் கொடுக்கிறது. மெய்யாகவே சாதி ஒழிய வேண்டும் என்று நம்மில் எவருமே உண்மையாக விரும்பவில்லை. நாம் அனைவருமே பொய்யாகவே அதை ஒழிக்க முயல்கிறோம். அதை வெறுக்காமல் வெறுத்ததுபோல் பேசுகிறோம்; எழுதுகிறோம்; செயல்படுகிறோம். உண்மையாக இந்த வகையில் நாம் நன்றாகத் திறம்பட நடித்துக் கொண்டிருக்கின்றோம்.

சாதியை நாம் நினைத்தால் ஒழிக்க முடியாதா? முடியும் !

சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் உண்மையிலேயே நமக்கிருக்குமானால், அது ஒழியாதா என்ன? அதை அழியச் செய்ய முடியாதா? என்ன? அஃதென்ன பூதமா? அல்லது மெய்ப்பொருளா? அல்லது என்றுமே அழியாத இயற்கை அமைப்பா? ஒழிக்க முடியவில்லை என்பதற்கு! உண்மையாகவே இந்த வகையில் இன்னும் நமக்குத் தெளிவான அறிவு வரவில்லை; உணர்வு தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும்!

ஆனால், சாதி ஒழிய விரும்பாதவர்கள்
இன்றும் உள்ளனரே!

சிலர், சுற்றி வளைத்து, அஃது ஒழிய, அல்லது ஒழிக்க விரும்பாத மனத்தினராகவும், சிலர், அதனால் இக்கால் கிடைத்துவரும் சலுகைகளைத் துறக்க விரும்பாத நிலையினர் அல்லது உளத்தினராகவும் இன்னும் சிலர், அதை ஒழிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளையும் இயலாமைகளையும் கூறி, அதன் முயற்சி வெறுமையைச் சுட்டினராகவும், பலவாறும் பற்பல வகையான கருத்துகளை நம்மிடையே எடுத்துக் கூறுகின்றனர். ஆனால், ஒட்டு மொத்தத்தில், இப்பொழுதுள்ள நிலையில், சாதி ஒழிய வேண்டாம் என்று கருத்து கொள்ளும் வஞ்ச நெஞ்சினரும், காரறிவாண்மையரும், கயவரும், குமுகாயக் கொடியவர்களும், இவ்விருபதாம் நூற்றாண்டு அறிவியல் காலத்திலும், ஓரளவில் இருக்கவே செய்கின்றனர் என்பது மிகவும் வருந்துவதற்கும், நாம் மேற்கொண்டு வலிந்து உடனடி முயற்சி செய்வதற்கும் உரியதாகவிருக்கின்றது.

இதுவும் ஒருவகை முதலாளியக் கோட்பாடே!

பொருளியல் முதலாளியக் குமுகாய உள்ளரிப்பு நிலைபோல், சாதியுணர்வும், நிறவெறியும் ஒருவகை முதலாளியக் கோட்பாடேயாகும் என்பதை அனைவரும் நன்கு தெளிந்து கொள்ளுதல் வேண்டும்.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/17&oldid=1164320" இலிருந்து மீள்விக்கப்பட்டது