பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெடுநாள் பழக்கத்தை விட்டு விலகும் மன ஆற்றாமை அதிலும் உண்டு. ஆனாலும் அறிவும் உணர்வும் வளரப்பெற்றவர்களாக, தாமே அச் சாதிப் பிடிப்பினின்று விலகும் நல்லுணர்வாளர்களைத் தவிர, மற்ற அல்லுணர்வாளர்களை, அரசு கழுத்தைப் பிடித்தேனும் நெட்டித் தள்ளிக்கொண்டு, சாதிக்கேட்டுக்கு வெளியே கொணர்ந்து நிறுத்தத்தான் வேண்டும். இஃது ஒரு பனிமலைப் பெயர்ப்பு முயற்சிதான். ஆனாலும் அணுவாற்றல் மிகுந்த இவ்வூழியுள் அதனை எவ்வாறேனும் செய்தேயாகல் வேண்டும்!

சாதியொழிப்புக்கு இதுவரை வெளிப்படுத்திய கருத்துரைகளைவிடச்
செயல் முயற்சிகள் குறைவு!

சாதியொழிப்புக்கு இதுவரை ஏற்பட்ட அறநூலாக்கங்கள், குமுகாய மேம்பாட்டு விழிப்புரைகள், வேண்டுகோள்கள், விளம்பரப் பரப்பல்கள் என்னும் பலவற்றைவிட அதற்காகச் செய்யப் பெற்ற முயற்சிகள் மிகமிகக் குறைவே. அதுவும் சாதி ஒழியாததற்கு ஒரு பெருங் காரணமாகும். சாதியுணர்வுக்கு ஆளான ஒரு கோடிப் பேர்களுள் ஒரு பத்தாயிரம் பேர்களே சாதியொழிப்புணர்வு கொண்டுள்ளனர்; அப் பத்தாயிரத்துள் ஓர் ஆயிரம் பேர்களே சாதியொழிப்பு பற்றிப் பேசுகின்றனர்; அவ்வாயிரத்துள் பத்துப்பேர்களே ஏதேனும் முயற்சி செய்கின்றனர்; அவர்களுள்ளும் ஒரிருவரே சாதியுணர்வை ஒழித்துப் புது மாந்த இனத்துள் தங்களையும் உறுப்பினர்களாக்கிக் கொள்கின்றனர்; எனவேதான் சாதியுணர்வு, நகர்த்தவியலாத சண்டிமாடு போல், நம் முன்னேற்றப் பாதையுள் ஆழக் குழிபறித்துக்கொண்டு படுத்துக் கிடக்கின்றது.

சாதியுணர்வும் பொருளியல் பின்தங்குதலும் ஒன்றையொன்று இணைத்துக் கொண்டுள்ளன!

இனி, சாதியுணர்வும், பொருளியல் பின் தங்குதலும் ஒன்றையொன்று இணைத்துப் பிணைத்துக் கைகட்டிக் கொண்டு ஒத்து நடையிடுவதால், இரண்டில் ஒன்றைப் பிரித்து, ஒன்றுக்கு விடுதலையளிப்பது, இயலாத ஒரு பெரும்பாடாக விருக்கின்றது. இந்நிலை, அவற்றுக்காகத் தனித்தனி முயற்சி செய்பவர்களிடம் ஒரு சோர்வையே உண்டாக்குகின்றது. எனவே, ஒன்றினால் மற்றொன்று தடைப்படாத ஒருவகைத் திட்டத்தையே நாம் தெரிவுசெய்து, செயல்படுத்த வேண்டி உள்ளது.

இதுவரை செய்த முயற்சிகளும்
இறுதியான, செயலுக்குரிய ஒரு திட்டமும்!

இதுவரை சாதியொழிப்புக்குக் கலப்பு மணம், மன மாறுபாடு, கருத்துப் பரப்புதல், சட்டமிடுதல் முதலிய பல திட்டங்களையும்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/19&oldid=1164323" இலிருந்து மீள்விக்கப்பட்டது