பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 



சாதி சமயங்கள்
 

அறிவுத் துறையிலும், மக்கள் ஒற்றுமைப் பண்பாட்டிலும் மற்ற நாட்டினர் நாகரித்தின் மலை முகட்டில் நிற்ப, நந்தமிழ் நாட்டார் மட்டும், சாதிப் படுகுழியிலும் சமயச் சேற்றிலும் வீழ்ந்து அழுந்திக் கொண்டிருக்கின்றனர். இதுபற்றி, இந்நாட்டில், 'கற்றோம்' என்று தருக்கித்திரியும் யாவரும் நாணித் தலை கவிழ்க்க வேண்டும்; அற்றேல் மானமிருப்பின் இவ்விழிவு தாங்காமல் உயிரைப் போக்கிக் கொள்ளல் வேண்டும்.

ஆயிரமாயிரம் நெறிமுறை நூல்கள் தோன்றிய நாடென்றும், இறைநெறி நூல்கள் நிறைந்துள்ள உயர்நாடென்றும், எடுத்ததற்கெல்லாம் இறைவன் திருத்தோற்ற மெடுத்து மெய்நெறி வாழ்க்கை முறைகளை மக்கள் உய்யும் பொருட்டுக் கூறிப்போந்த திருநாடென்றும், பன்னூறு இலக்கியங்கள் தோன்றிப் பண்பாடு காத்த பொன்நாடென்றும், ஆயிரக்கணக்கான கோயில்களும் பல்லாயிரக் கணக்கான புராண, ஆகம உபநிடத நெறிமுறைகளும், அவற்றை மக்கட்குக் கூறுதலையே தத்தம் வாழ்வுத் தொண்டாகக் கருதி வாழ்ந்த நூற்றுக்கணக்கான துறவியரும், ஒழுக்க நெறியாளரும், அறநூல்கள் பலவும் தோன்றிப் படர்ந்து பல்கிய நாடென்றும் புகழப்படுகின்ற இந்நாட்டில்தான் நூற்றுக்கணக்கான சாதிப் பகுப்புக்களும் சமயப் பகுப்புக்களும் புகுந்து மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கவும், விலங்கினும் கீழாக மக்களுட் பலரை வெறுக்கச் செய்யவும் செய்தன. இவ்வழுகலையும், ஒழுகலையும் சமயப் புனுகிட்டு மூடிப் பொதிந்து வைத்து வெளிநாட்டார் அறியாமற் செய்துவரும் இந்நாட்டுப் பொறுப்பாளர் தம் அறியாமையை என்னென்போம்.

ஒரே அணுத்திரளையாக மாந்தர் உருப்பெறுதலும் ஒரே உணர்வாலும் அறிவாலும், குருதியோட்டக் கொள்கலன்களாலும் உருவாக்கப்பெற்று மக்களுள் ஒருவராய் விளங்கியிருப்ப அவரை இழிந்தோர் என்று

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/26&oldid=1164330" இலிருந்து மீள்விக்கப்பட்டது