பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 இவற்றின் பயனாய்த் தமிழர் என்ற ஓர் இனமே இல்லா தொழிந்ததே. தமிழர் என்று இக்காலத்துச் சொல்லளவிலும் மொழியளவிலும் கூறித் தலையெடுத்துப் பேசுவார்தமக்கும் உள்ளுர தம்தம் சாதிப்பற்றும், சமயப்பற்றும் பற்றிப் படர்ந்தனவே தவிர, தமிழ்ப்பற்றோ, தமிழரினப்பற்றோ, தமிழ்நாட்டுப் பற்றோ, தினையளவும் இல்லையென்பதை எல்லோரும் ஒப்பியே ஆகல் வேண்டும்.

தமிழருள் கன்னடத்தார், தெலுங்கர், மலையாளத்தார் எனப் பிரிந்த பின்றை, எஞ்சியுள்ளோரில், ஒரு பகுதியினர் முகமதியராய் மாறி உருதுமொழி பேசித் தமிழ்ப்பற்றும் தமிழ் நாட்டுப்பற்றும், தமிழ் இனப்பற்றும் இன்றிக் குலைந்தும், கிறித்துவராய் மாறிக் கிறித்துவ மறையுங்கையுமாய்த் திரிந்து தமிழர் இனத்தொடும், மொழியொடும் மாறுபட்டு வாழ்ந்தும் வருகின்றனர். இவர் எல்லோரும் போக மிகுந்திருப்பவரிலும் சாதி, சமயப் படுகுழிகளில் வீழ்ந்துபோன காரணத்தால் ஒற்றுமை இன்றியும், நல்லுணர்வின்றியும் ஒரு சாதியாரைப்பற்றி ஒரு சாதியார் கவலைப்படாது தன் சாதிக்காரர் உய்யவே தன் மூச்சை இயக்குவதும், வேறு சாதிக்காரர் முன்னேறிப் போகையில் உடலெரிந்து புகைவதும் ஆகத் தாழ்ந்துபோகின்றனர்.

இவ்வாறு எல்லோரும்போக ஆரியர் கொள்கைக் குழப்பங்களை வெறுத்தொதுக்கித் தனியிடத்தே வாழ்ந்த கலப்பற்றத் தமிழரைத் தாழ்ந்தோர் என்றும், இழிந்தோர் என்றும் இத் தமிழர் என்று கூறிக் கொள்கின்றவரே தாழ்த்துவதும் வீழ்த்துவதுமாக இருக்கின்ற கொடுஞ்செயலை உன்னிப்பார்க்கின் நாம் அறிவிலும், நாகரிகத்திலும் உயர்ந்துள்ளோம் என்று எவரேனும் கூறுவரோ?, அவர் கூறினும் அறிந்தவர் ஒப்புவரோ? அறிவுடையோரே ஒர்மின்.

"ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?

என்று கேட்கும் கேள்வியில் விடுதலை மூச்சு வெளிவருகின்ற அதே நேரத்தில் மடமையும் அன்றோ கொப்பளிக்கின்றது?

அன்னியர் வந்து புகவேண்டுவதில்லைதான். அதற்கென மலக்குவியலாக நாம் இருப்பது நம் அறிவுடைமையைக் காட்டுவதாகுமோ? இவ்விழிவுகளை நாம் அறியாவண்ணம் செய்து, சீழ் பிடித்துப் புரையோடிப் போகக் கருவியிட்டாற்றாமல் புண் வைத்து மூடலாமா?

ஒழுக்க விழுப்பத்திலும், அற நெறிகளிலும் தோய்ந்து பலபடக் கூறி மாற்றார் மயங்கப் பேசும் நந்தமிழ் நாட்டின் உயர்வுகள் எங்கே? சிலப்பதிகாரமும், மணிமேகலையும், கம்பராமாயணமும், வில்லிபாரதமும், திருக்குறளும், நாலடியாரும் நம் கைகளில் இருப்பது எற்றுக்கு? நம்மால்

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/28&oldid=1164332" இலிருந்து மீள்விக்கப்பட்டது