பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்நூல்களுக்குந் தாழ்வேற்படுமேயல்லாது, அந்நூல்களால் நமக்குப் பெருமை ஏற்படுமோ? சேர சோழ பாண்டிய இனம் இப்பொழுது உள்ளதா? அதுபற்றிப் பேசி எய்தப்போகும் சிறப்பென்னை? ஐயகோ, பேசிக் கெட்டதல்லாமல் தமிழன் வாழ்ந்திருந்தது என்று? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தமிழர் மட்டுந்தாம் தோன்றினாரா? அக்கல்லும் மண்ணுங் கூடத்தாம் தோன்றியிருந்தன. அவை மட்டுமா? அறிவியல் நூற்படி புழுவும், பூச்சியும், பறவையும், விலங்குகளுந்தாம் தோன்றியிருந்தன. அதன் பழமை நோக்கி அன்று தோன்றிய கல்லை முத்தென்றும், மண்ணைப் பொன்னென்றும், குரங்கை உடன் பிறப்பென்றுமா போற்றுகின்றோம்? இல்லையே. வெறும் காலப் பழமையாலும், மொழிச் சிறப்பாலும், இலக்கிய வளத்தாலும், வான் முட்டக் கோயிலெடுப்பதாலும், செம்பாலும், வெள்ளியாலும், பொன்னாலும் தெய்வப் படிவங்களைப் பண்ணி வைப்பதாலும், அவற்றிற்குப் பாலாலும், பழத்தாலும், தேனாலும், நெய்யாலும் வழிபாடுகள் செய்வதாலுமே ஒருவன் உயர்ந்தவனென்றால், இன்று அமெரிக்கரைவிடச், சீனரைவிடச், சப்பானியரைவிடத் தமிழன் முன்னேறியல்லவோ இருத்தல் வேண்டும். அன்று. அன்று. எந்தமிழ்மக்களே, வெறும் பழமையாலும், மொழியாலும் நீங்கள் உயரப்போவது எக்காலத்தும் நிகழப்போவதில்லை. இதை நெஞ்சில் நிறுத்துங்கள்.

மக்கள் குலத்தில் தாழ்ந்தோன் உயர்ந்தோன் என்று பாகுபாடு செய்யும்வரை நீங்கள் உயரப்போவதில்லை. தமிழ் பேசுவோர், தமிழ்த் தாய்க்குந் தந்தைக்கும் பிறந்து தமிழன் என்று சொல்லிக் கொள்ளும்வரை நீங்கள் உலகில் உள்ளவரோடு ஒப்பவைத்துச் சிறப்பிக்கப்படப் போவதில்லை. பள்ளனென்றும், பறையனென்றும், பிள்ளையென்றும், முதலியென்றும், பெயர்கள் சூட்டிக்கொண்டு பிதற்றித் திரியும்வரை நீங்கள் தமிழர் அல்லர். அவ்வாறு கூறிக்கொள்வதில் பொருளுமில்லை. சைவ மென்றும், சைவமே தமிழ் என்றும், வைணவம் என்றும், வைணவமே தமிழ் என்றும், பெளத்தம் என்றும், பெளத்தமே தமிழ் என்றும், சமணம் என்றும், சமணமே தமிழ் என்றும், கூறிக்கொண்டு மக்களை மக்கள் என்று கூற மறுத்தீர். இந்த இழிநிலை உள்ளவரை தமிழ்நாட்டைத் தமிழ்நாடென்று உலகில் வேறு ஒருவனும் கூற விரும்பமாட்டான்.

“இத்தகைய பாகுபாடுகள் இல்லாமற் போமாயின், தமிழ் நூல்கள் இல்லை. தமிழ் இலக்கியங்கள் இல்லை" என்று கூறுவீரானால் அத்தமிழ் நூல்களும், தமிழ் இலக்கியங்களும் அழிந்து போகட்டும். நீங்கள் எழுதிவைத்த தமிழ் இலக்கியங்களும் நெறி நூல்களும் தமிழ்நாட்டிற்கே பயன்படப்போவதில்லையாயின் வேறு எந்நாட்டவர்க்கு அந்நூல்கள் பயன்படப்போகின்றன? அறிஞரே எண்ணிப் பார்மின்!

சாதிச் சழக்குகளும், சமயப்புரட்டுக்களும் நம் நாட்டை

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/29&oldid=1164333" இலிருந்து மீள்விக்கப்பட்டது