பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உய்விக்கவில்லை என்பதை ஐயாயிரம் ஆண்டுகளாக ஏன், கல் தோன்றி மண்தோன்றா முன்பிருந்தே கண்டோம். கண்டும் உணர்ந்தோமா? இல்லையே இன்றைக்கும் அக்கொடும் பள்ளத்தாக்குப் படுகுழிகளிலிருந்து மீளமுடியவில்லையே. இன்று தமிழன் என்று தம்மைச் சொல்லிக்கொள்வார் ஒவ்வொருவருக்கும் தமிழ் என்மொழி; அது என்விழி; என்று அழகுபட மொழிவார் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.

உங்கள் தமிழ் நூற்கள் உங்கட்குப் பெருமைதரும் அளவிற்கு உள்ளனவா? அஃதாயின் உங்கள் பெருமையின் அளவு எது?

நெஞ்சைத் தொட்டுத் திருக்குறளைக் கையேந்தி இதற்கு விடை கூறுங்கள். திருக்குறள் இப்பாழுந் தமிழன் கையிலிருக்க வேண்டிய நூலன்று. நிலாவுலகத்துக்குப் போவதாகக் கூறிக் கொள்ளும் அறிவியல் வல்லுநர்க்கு ஒரு சொல். "நீங்கள் அங்கு அழைத்துப்போகும் மக்களுள் ஓர் அமெரிக்கனும், ஓர் உருசியனும், ஓர் ஆங்கிலேயனும் ஒரு சீனனும், ஒரு சப்பானியனும் ஒரு பிரஞ்சியனும் என நாட்டிற்கொருவராக இருக்க விடலாம். ஆனால் இத்தமிழ்நாட்டான் ஒருவனைக்கூட அங்குக் கொண்டு போக வேண்டாம், அவன் வந்தால் அத்தூய நிலாவுலகத்தில் சாதிகள் என்னும் முட்காடு முளைக்கும். சமயங்கள் எனும் படுகுழிகள் வெட்டப்படும். இப்பாழுந் தமிழனுக்காக இவன் நாட்டிலுள்ள திருக்குறளை மட்டும் எடுத்துக்கொண்டு போங்கள். அது இவனிடமிருப்பதைவிட உங்கள் எல்லோரிடமும் இருப்பது நல்லது"

தென்மொழி, இயல்: 1 இசை: 12
(1960)

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/30&oldid=1164334" இலிருந்து மீள்விக்கப்பட்டது