பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மன்றத்தின் படிக்கட்டுவரை சாதிக் கொடுமைகள் மக்களைப் பேயாய் ஆட்டி வைக்கின்றன. நாட்டை யாள்கின்ற பெருந்தலைவர்களும் தம் தம் சாதிப் பட்டங்களைப் பறை சாற்றிக் கொள்ள விரும்புவது மன்றி, அச்சாதி வெறியர்களுக்கு மறைமுகத் துணைவர்களாகவும் இருந்து வருகின்றனர். அவ்வச் சாதியினர் அவரவர் மக்களையே முன்னேற்றிவிட அல்லும் பகலும் அரும்பாடுபடுகின்றனர். இன்னவாறு சாதியென்னும் பெருவிலங்கு தன் கட்டைவிரல்களையும் சுட்டு விரல்களையும் அங்கிங் கெனாத படி எங்கும் படிய வைத்துக் கொண்டு மக்களைச் சீரழித்துக் கொண்டு வருகின்றது. இவற்றிற் கெல்லாம் ஒரு முடிவு வேண்டாவா? அவற்றை ஒழிப்பதுதான் எப்படி என்று இவ்விந்திய நிலத்தில் யாருக் கொருவராகிலும் கவலை கொள்பவராக இருப்பர். சாதியொழிப்புக்கு எவ்வளவோ வழிகள் எக்காலத்தும் எல்லாராலும் அவ்வப்பொழுது சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் எந்த வழியாக விருப்பினும் அதை அந்தச் சாதி வெறியர்களிடமே ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதுவரை இவ்வகையில் ஈடுபட்டுழைத்த நல்லவர்கள் சிலரால் ஒருசில கொடுமைகளே தடுக்கப் பெற்றிருக்கின்றன என்றாலும், சாதி அமைப்புகளை இவர்களின் முயற்சிகள் ஒருசிறிதாவது தகர்த்துள்ளன என்று கூற முடியாது. இவற்றிற் கெல்லாம் காரணம் அவர் செய்த முயற்சிகளெல்லாம் என்றும் அரசினர் சார்புள்ளவையாக இல்லாமலிருந்தமையே! எவரேனும் துணிந்து எதிர்பாரா வகையில் இந்நாட்டின் வல்லதிகாரம் படைத்த தலைவராக வருவாரானால் அவருக்குப் பயன்படும் வகையில் கீழ்க்கண்ட வழிமுறைகளை அவர் தம்செவிகளில் போட்டு வைக்கின்றோம். அப்படி அவர்கள் அந்நிலைக்கு வருவார்களானால் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு துணிந்து இவ்வழிகளை மேற்கொள்ளலாம். மற்றப்படி இவற்றை அரசினர் மேற்கொள்ளப் போவதில்லை. அவை இவை:

1. சாதிப் பெயர்களை எக்காரணங் கொண்டும் அரசினர். ஆவணங்களிலும் பதிவுகளிலும் பதிந்து கொள்ளாதிருத்தல்.

2. சாதிகளின் பெயர்களால் உள்ள தெருக்கள் (சின்னப்ப முதலித் தெரு, இருசப்ப செட்டித் தெரு முதலியன) ஊர்கள் (இரெட்டியார் பாளையம், வண்ணாரப்பேட்டை முதலியன) மன்றங்கள் (சைவ வேளாள மகா சன சங்கம்), (வன்னிய குல சத்திரிய சேவா சங்கம் முதலியன), வாணிக நிலையங்கள் (பிராமணாள் கபே, நாட்டுக் கோட்டைச் செட்டியார் நகைக்கடை முதலியன), செய்தித்தாள்கள் (செங்குந்த மித்திரன், சலவை மணி முதலியன), கல்விக் கூடங்கள் (நாடார் உயர் நிலைப்பள்ளி, செங்குந்தர் உயர் நிலைப்பள்ளி முதலியன), கட்சிகள் (வன்னியர் முன்னேற்றக் கட்சி, தாழ்த்தப்பட்டோர் லீக் முதலியன), திருமணக் கூடங்கள் (ஆரிய வைசிய கல்யாண மண்டபம், தியாகு முதலி கலியாணச்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/37&oldid=1164347" இலிருந்து மீள்விக்கப்பட்டது