பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லதிகார ஆட்சியோதாம் அவற்றைச் செய்ய முடியும். அதுவரையில் எத்தகைய கல்வியாலுமோ, ஆட்சியாலுமோ சாதியென்னும் பரந்து வளர்ந்த கள்ளிக்காட்டில் ஒரு சுள்ளியைக் கூட அகற்றிவிட முடியாது. வேண்டுமானால் அவர்களின் அரசியல் பித்தலாட்டங்களுக்குச் சாதியொழிப்பு என்ற சடங்கு முறையையும், அவர்தாம் நடிக்கும் அரசியல் சீர்திருத்த நாடகங்களில் சாதியொழிப்பு என்ற ஒரு நகைச்சுவைக் காட்சியையும் காட்டிக் கொண்டிருக்கலாம். மற்றப்படி அவற்றால் ஒரு சிறு மாறுதலையும் கட்டாயம் விளைவித்து விட முடியாது. வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல் நம் நாட்டை அடைத்துக் கொண்டுள்ள சாதிக் காடுகளை அழிக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. ஆங்காங்குக் குமுகாயக் காளான்களாக முளைத்துக் கொண்டிருக்கும் 'சாதி'க் கிறுக்கர்களின் வெறிக் கூட்டங்களில் நம்மையும் உறுப்பினராக்கிக் கொள்ளாமலிருப்போமாக.

தென்மொழி, சுவடி. 3 ஒலை-8 (1965)

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/39&oldid=1164349" இலிருந்து மீள்விக்கப்பட்டது