பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்னென்று சொல்வோம்?

துறக்க மென்பார்; இறைப் பணியென்பார்;அன்பென்பார்;
தொலைசென்று கற்றவர் என்பார் - கண்
உறக்க மிலாதுயிர்த் தொண்டென்பார்; பணியென்பார்
உலகெலாம் ஒன்றென ஆர்ப்பார்!
சிறக்க வுண்பார்; உடுப்பா ரருஞ் செயல்களைச்
சிறப்புறச் செய்தனம் என்பார் - ஆனால்
பறக்கும் பறவைக்கும் விலங்குக்கும் இல்லாத
பல் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்.

வளியும் எழுசுடர் ஒளியும்ஆய் வார்; கடல்
வண்ணமும் மண்ணையும் ஆய்வார் - புற
வெளியும் உலாவி விண் கோளுக்குஞ் சென்றுயிர்
வீழ்வையும் வென்றனம் என்பார்!
துளியும் மடமை யிலாதெங்கும் ஒட்டியே
தோற்றுவோம் புத்துல கென்பார் - ஆனால்
நெளியும் புழுவுக்கும் பாம்புக்கு மில்லாத
நெடுஞ் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்!

மருவறப் பேணுக உடலென்பார்; உளமென்பார்!
மற்றுயிர் போற்றுக வென்பார்! - நிலத்
தொருவருக் குணவிலா திருந்திடில் உலகத்தை
ஒழித்திடு வோம்; உண்மை யென்பார்!
தெருவற ஊரற நாள்தோறும் கூட்டங்கள்
திட்டங்கள் பற்பல செய்வார் - ஆனால்
கருநிறக் காக்கைக்கும் கழுகுக்கும் இல்லாத
கடுஞ் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்!

எவர்முகங் கண்டாலும் இழி 'சாதி'க் குறிகள்;ஈங்
கெவர்பெயர் பின்னுக்கும் வால்கள் - தெருச்
சுவர்களில் இல்லக் கதவுகள் தம்மிலும்
சூழ்ந்தன இழி சாதிப் பேய்கள்!
அவரவர் குலத்துக்குத் தனித்தனிக் கழகங்கள்!
அவரவர் குலத்துக்குப் பள்ளி - கற்ற
எவரெவர் ஆனாலும், குலவெறித் தீமைக்கே
இழுக்குவார்! என்னென்று சொல்வோம்!

தென்மொழி, சுவடி-4, ஒலை-9 (1966)

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/42&oldid=1164489" இலிருந்து மீள்விக்கப்பட்டது