பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரிக்கப்பட்டுள்ளனர். ஒருவன் சைவன் என்று தன்னைப் பெருமையாகக் கூறிக்கொள்ளுகின்றான் இன்னொருவன் வைணவன் என்கின்றான். இப்படிச் சமணன் என்றும், புத்தன் என்றும், இசுலாமியன் என்றும், கிறித்துவன் என்றும் பலவாறாகத் தம்மைக் கூறிக்கொள்கின்றனர் மக்கள்.

தம்பி! இவர்கள் இத்துடன் நிற்கவில்லை. இவர்கள் சார்ந்த சாதிகளையும் மதங்களையும் வெளிப்படையாகக் காட்டி அவ்வவற்றிற்கான குறியீடுகளையும், பூச்சுகளையும் தங்கள் உடல்களில் அணிந்து கொள்கின்றனர். பிராமணன், தான் எல்லா மக்களினும் மிகவும் உயர்ந்தவன் என்று கூறிக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் ஒரு பூணூலையும் தன் உடலில் மாட்டிக் கொள்கிறான். உன்னுடன் படிக்கும் பிராமணத் தம்பியை நீ அழைத்து "தம்பி உன் உடலில் பூணூல் அணிந்திருக்கின்றாயா?" என்று கேள். "ஆமாம்" என்பான். அஃது எதற்கு? என்று கேள். "நாங்களெல்லாரும் பிராமணர்கள் உங்கள் எல்லாரையும்விட சாதியிலே உயர்ந்தவர்கள்" என்பான். இன்னும் சைவனாக இருந்தால் பூணுலுடன் நெற்றி நிறைய நீறும், வைணவனாக இருந்தால் பட்டையான நாமமும் தீட்டியிருப்பான்.

தம்பி! இந்தச் சாதியமைப்புகளும் சமய அமைப்புகளும் போலியாகவும், பூசலுக்காகவும் ஏற்பட்டவை. மக்கள் அறியாமையால் தங்கள் தங்களுக்குள் உணவுக்காகவும், உடைக்காகவும், உறையுளுக்காகவும் போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்கள்; மூட நம்பிக்கைகள். இவை இவ்விருபதாம் நூற்றாண்டின் எல்லைவரையிலும் கூட நம்மை விட்டுப் போன பாடில்லை. நாம் இறந்துபோன பின்னர்கூட இச்சாதிகளும் சமயங்களும் நமக்கு அடையாளங்களாக நின்று நம்மைத் தாழ்த்திக் கொண்டும் உயர்த்திக் கொண்டும் உள்ளன.

அன்புள்ள தம்பி! இறைவன் பொதுவானவன். அவன் இன்ன வடிவினன், இன்ன நிறத்தினன் என்றுகூட நம்மால் அறிய முடியாது. உணர்வு வடிவமாக இவ்வுலகங்கள் எல்லாவற்றிலும் காற்றுப் போல், ஒளியைப்போல் அளாவி நிற்கும் இவ்விறைப் பேராற்றலை நாம் வணங்கினாலும் அல்லது வணங்காமல் நின்றாலும் ஒன்றுதான். எல்லா அறிவும் தானேயாக நிற்கும் அவ் விறையாற்றலுக்கு நம் அறிவும் ஒன்று தான்; அறியாமையும் ஒன்றுதான். விருப்பு வெறுப்பற்ற அப்பேருண்மைக்கு நம் விருப்பமும் ஒன்றுதான்; வெறுப்பும் ஒன்றுதான். எனவே தம்பி, நீ நெற்றி நிறைய நீறுபூசிக் கொள்வதும், நாமம் தீட்டிக்கொள்வதும் அவற்றுக்குள் பூசல்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பித்துக் கொள்வதும் உன் அறியாமையே தவிர வேறு இல்லை. நீ செய்கின்ற அறியாமைக்கும் பூசல்களுக்கும் இறைவனைக் காரணங்காட்டாதே! நம் சாதிப் பூசல்கள் நம் இனத்தை அழிப்பன. நம் சமயப்பூசல்கள் நம் அறிவைத்

 

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/44&oldid=1164357" இலிருந்து மீள்விக்கப்பட்டது