பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘சாதி’ப் புழுக்கள் நெளிந்திடும்
சாணித் திரளைகள் நாம்!

எங்குப் பிறப்பினும் வாழினும் என்னினம்
ஏற்றமுற் றுய்யவே வேண்டுவேன்!-ஒரு
தங்கச் சிலையினைக் காப்பதுபோல் தமிழ்த்
தாயினைக் காக்கவே தூண்டுவேன்!
வங்கக் கடலினைத் தாண்டினும் மேற்றிசை
வானைக் கடந்துநாம் வாழினும்-புகழ்
மங்கச் செயுங்குலத் தாழ்ச்சியை என்னினம்
மண்ணிற் புதைத்திடக் கேட்குவேன்!

செந்தமிழ்த் தாய்பெற்ற பிள்ளைகள் நாம்;ஒரு
சேரப் பழுத்த பழக்குலை!-இதில்
எந்தப்ப ழத்தை உயர்வென்று சொல்வது?
எதனை இழிவெனக் கொள்வது?
முந்தப் பெறும்பல பேரினங்கள் இந்த
முதுமை நிலத்தினில் வாழ்கையில்-நாம்
கொந்திப் பிடுங்கிடும் தாழ்ச்சி யுயர்ச்சியால்
குலங்குல மாய்மனங் காய்வதோ ?

வேற்றுப் புலத்திடை வாழவந் தோம்;உயர்
விண்ணை-கடல்களை நீந்தினோம்!-நிலந்
தூற்றப் பெறுங்குலத் தாழ்ச்சி உயர்ச்சியின்
தொல்லைகள் நீந்தத் தயங்குவோம்!
மாற்றப் பெறும்புதுத் தோற்றங்கள் பார்க்கிறோம்
மற்றும் பொதுமைகள் காண்கிறோம்!-உயிர்
ஊற்றை-உடலினைத் தாழ்வு சொலும், இழி
வுள்ளச் சிறுமைகள் சேர்க்கிறோம்!

வானென ஓங்கிடும் கட்டிடங் கள்,பல
வாழ்க்கைப் புதுமைகள் செய்கிறோம்!-விண்
மீனெனப் பூத்த உயிர்களி டையே, கீழ்
மேலென வேற்றுமை பெய்கிறோம்!
தானுயர் வென்றிடும் சாதிகளும் ஒன்றிற்
றாழ்ந்த நிலைக்கொன்று தாழ்கையில்-தாழ்(வு)
ஏனெனக் கேட்க நடுங்கிடு வோம்; அறி
வூக்கமி லாதவோர் தன்மையால்!

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/46&oldid=1164361" இலிருந்து மீள்விக்கப்பட்டது