பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அயலகத் தமிழரின் பொருட்டு ஓர் அழுகை!

தமிழர்கள் இவ்வுலகில் எங்குப் போய் வாழ்ந்தாலும் ஒரே உணர்வினராக - ஒரே வகைப் பண்பினராக வாழ்கின்றனர் என்பது ஒரளவில் மகிழ்ச்சி தருவதனாலும், பிறிதோரளவில் மிகவும் வருத்தம் தருவதாகவும் இருக்கின்றது என்பதை என் சிங்கை மலேசியச் சுற்றுச் செலவின் பொழுது உணரவேண்டியிருந்தது. தாய் நிலந் துறந்து வேற்றுப் புலங்களில் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காவும் குடி பெயர்ந்து மலைகள் தாண்டியும் கடல்கள் தாண்டியும் சென்று வாழும் தமிழர்கள், பெரும்பாலும் கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் என்னென்ன வகையான உணர்சசிகளுடன் வாழ்ந்தார்களோ அவ்வவ் வகையான உணர்ச்சிகளுடனேயே அங்கும் போய் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மொழிப்பற்றும் இனப்பற்றும் அவர்களின் நல்லுணர்வுகளாக இன்றும் ஆங்காங்கே பளிச்சிட்டு மிளிர்கின்றன என்றாலும், தமிழகத்தில் உள்ள மூடநம்பிக்கைகளும் அவர்கள் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து கொண்டிருப்பதைப் பல விடங்களில் பலர்வயின் கண்டேன்; கண்டு மிகவும் வருந்தினேன்.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள தமிழர்கள் பலர் பல தலைமுறைகளைக் கண்டவர்களாக விளங்குகின்றனர். அவர்களுள் பெரும்பாலார் தங்கள் உடைகளிலும் உணவு முறைகளிலும் ஆங்காங்கு உள்ள பழக்கவழக்கங்களையே பின்பற்றி வருகின்றனர் என்றாலும், சிறுபான்மையினர் இன்றும் வேட்டி சட்டை உடுப்பவர்களாக இருப்பதையும் கண்டு மகிழ்ந்தேன். மேலும் தோட்டப்புறங்களில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்கள் குடியிருப்புகளில் புகுங்கால் தமிழகத்திற்குள் நுழைவது போன்ற ஒர் உணர்ச்சியே உண்டானது. சில இடங்களில் அரசமரத்தடி கோவில்களும் நம் பெண்களின் அரட்டை அளப்புகளும் எனக்குத்

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/48&oldid=1164364" இலிருந்து மீள்விக்கப்பட்டது