பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகச் சிற்றூர்ப் புறங்களையே நினைவூட்டின. ஆனால் இவ்வகை உணர்வுகளில் எல்லாம் என் உள்ளத்தில் தீப்போல் காந்தியவை, அவர்கள் தங்களுக்குள் இன்னும் விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் குல, சமய வேறுபாடுகளேயாகும்.

சிங்கை மலேசியத் தமிழர்களுள் ஒரு கணிசமான பகுதியினர் இலங்கைத் தமிழர்களாவர். அவர்களும் தாய்த் தமிழகத்தினின்று குடியேறிய பலரும் பெரும்பாலும் சிவனிய(சைவ)க் கொள்கையினராக இருந்தாலும் மாலிய (வைணவ) வழிபாடும் வேறுசில சிறுதெய்வ வழிபாடுகளும் கூட அவர்களிடையே இருந்து வருகின்றன. தமிழகத்துப் பிராமணப் பூசாரிகள் சிலர் சில கோயில்களில் இருந்து வழிபாடுகளுக்குதவுவதை நான் பார்த்து வியந்தேன். சிலரிடம் இதைப்பற்றிக் கேட்டபொழுது, அவர்கள் தமிழகத்தினின்று இதன் பொருட்டாகவே தருவிக்கப்பட்டனர் என்று விடை கிடைத்தது.

சில கோயில்களில் தமிழ்க் குருமார்கள் சிலர் பூச்சார்த்திகளாக இருந்து வருவதும் குறிப்பிடத் தகுந்தது. கோயில்களைப் பற்றிய அமைப்புகளிலெல்லாம் தமிழக மணமே வீசுகின்றது. சிலைகளின் அமைப்பும் கோயில் மதில் சுவர்களின் தோற்றமும் வண்ணப் பூச்சுகளும் தமிழகத்தையே அங்கு உருவாக்கிக் காட்டுகின்றன. அவை முற்றும் தமிழகச் சிற்பிகளையே கொண்டு செய்யப்பட்டனவாகத் தெரிகின்றன. சிலவகைச் சமய மூடநம்பிக்கைகளையும் அங்குத் தமிழகத்தைப் போலவே காண நேர்ந்தது. ஆனால் இவற்றில் எல்லாம் கூட என் மனம் மிகவும் வருந்துமாறு ஏதும் நடந்து விடவில்லை. தமிழ் எவ்வாறு ஆரியக் கலப்பு நீக்கம் பெற்றுத் தூய்மையுற வேண்டியுள்ளதோ, அதுபோலவே தமிழர்களின் சமயவுணர்ச்சியும் ஆரியக் கலப்பு நீக்கம் பெற்றேயாகல் வேண்டும். அதைத் தொற்றிக் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள், மனவேறுபாட்டு நோய்கள் முதலியனவும் நீங்கியாகல் வேண்டும். அதுவரை நாம் கொண்டுள்ள சமயக் கோட்பாடுகள் முழுத்துய்மை பெற்றனவாகவோ பொதுமை சான்றனவாகவோ எல்லா மக்கள் நலத்திலும் ஒரே படித்தான அக்கறை கொண்டுள்ளனவாகவோ கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ள முடியாது.

இனி, சமய நிலைகள் ஒருபுறம் இவ்வாறிருந்தாலும், தமிழர்கள் தங்கள் தாய்நிலந் துறந்து அயல்நிலங்கள் நோக்கிக் கப்பல் ஏறும் பொழுது விடாப்பிடியாக அவர்கள் தமிழகத்திற் கொண்டிருந்த குலவேறுபாட்டுக் குப்பைக் கூலங்களையும் அன்றோ, அவர்கள் வாழப்புகுந்த அயல் நாடுகளுக்கு வாரிக்கொண்டு சென்றிருக்கின்றார்கள்! இந்த உண்மைதான் என் நெஞ்சாங்குலையில் நெருஞ்சி முள்ளெனக் குத்திக் கொண்டுள்ளது.

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/49&oldid=1164366" இலிருந்து மீள்விக்கப்பட்டது