பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவர்களின் அறியாமையை என்னென்பது பெயர்களின் பின்னர் இன்னும் வாலிட்டு எழுதுவது, இடுகாடு சுடுகாடுகளில் கூடச் சிற்சில இடங்களில் குலப்பிரிவுகளைக் கையாள்வது, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளில் குலவேறுபாடுகளைத் தெற்றெனக் காட்டும் பழக்க வழக்கங்களை இன்னும் குரங்குப் பிடியாய்க் கை கொண்டிருப்பது போலும் தீய மூடப்பழக்கங்கள் தமிழர்கள் எத்துணையளவு நாட்டியல், குளமுகவியல், பொருளியல் முன்னேற்றங்களைப் பெற்றாலும் தங்கள் மனங்களில் உள்ள மனக் கசண்டுகளை நீக்கிக் கொள்ளவே மாட்டார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலர் அவ்வப்பொழுது பொருளியல் முன்னேற்றம் ஏற்படுமானால் இந்தக் குல முறைகள் மூடநம்பிக்கைகள் எல்லாம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறக் கேட்டிருக்கின்றேன். பெரும்பாலும் பொதுவுடைமைக் கொள்கையினரும் பேராயக் கட்சிக் கொள்கையினர் சிலரும் இதைக் கூறி வருகின்றனர். இந்தக் கூற்றுக்கு மண்டையடி விழுந்திருக்கின்றது இங்கே! பொருளியல் மட்டுமன்று - அறிவியலில் முன்னேறினால் கூட, சில சமய வெறிகளும் 'சாதி'வெறிகளும் அறவே ஒழிந்து போகாமற் போனாலும் அடங்கியாகிலும் கிடக்குமா என்னும் ஐயப்பாடு என்னுள் பூதம்போல் வளர்ந்து விட்டது.

தமிழகத்தினின்று ஓராண்டுக்கு முன் இங்குச் சுற்றுலாப் போந்த திரைப்படப் பாட்டாசிரியர் கண்ணதாசன் இங்குப் பேசிய கருத்துகளைப் பற்றி அன்பர்கள் சிலர் வாயிலாகக் கேட்டுக் செவிகொதித்துப் போனேன். நிகரியக் கொள்கைகளையும், காந்தியப் பொதுமைக் கருத்துகளையும் பேசிவரும் அத் தமிழகக் குடிமகன், கோயில் கூட்டங்களிலேயே, கள்ளொழுகும் வாயுடன் 'முருகன் எங்கள் செட்டிக் குலத்தைச் சேர்ந்த கடவுள். ஐம்பெரும் பாவியங்களுள் இரண்டு பெரும் பாவியங்கள் (சிலப்பதிகாரமும் மணிமேகலையும்) எங்கள் செட்டியினப் பாவியங்கள்' என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டாராம். அதைக் கேட்டு, இங்கு வாழும் அவ்வினத்தவருள் பெரும்பாலோர் மிகவும் உடல் குளிர்ந்து போனார்களாம். (மேலும் அக் கண்ணதாசர் என்ன கூறினார் என்பதைக் கேட்கையில் அண்மையில் ஏதோ எம்.சி.இராமச்சந்திரன் தம் தேர்தல் விரகாண்மைக்காக, "நான் சொன்னால் தமிழகப் பெண்கள் தங்கள் கணவன்மார் பேச்சைக் கூடக் கேட்காமல் ஒப்போலைகளை எங்கள் கட்சிக்கே போடுவார்கள்" என்று சொன்னதைத் தப்பறைகொட்டி வாய்ப்பறை கிழித்த பச்சைத்தமிழர் பலர் இதைக் கேட்டால் என்ன கூறுவார்களோ என்று மனங்கொதித்து நின்றேன். "நான் இங்குள்ள இத்தனைக் கடவுள்களுள் ஏன் கண்ணனை என் கடவுளாகக் கொண்டிருக்கின்றேன் என்றால் அவன்தான் பெண்கள் பலருடன் கூடிக் களித்திருக்கின்றான்; அவனைப் போல்தான் நானும்" என்று கண்ணதாசத்

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/50&oldid=1164367" இலிருந்து மீள்விக்கப்பட்டது