பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் பெண்கள் எல்லாரும் தலைகவிழ்ந்து நாணுமாறு பெரிய பொதுக் கூட்டத்திலேயே பெருமை பேசியிருக்கின்றார். இதற்காகத் தான் போலும் இவர் தமிழகத்தில் கண்ணன் கோயிலைக் கட்ட முனைந்திருப்பதும், அதற்கு பலரும் ஊக்கமாக நின்று ஆக்கந் தருவதும்.) இந்நிலைகள் எல்லாம் குலவெறிக்கு எத்துணையளவு இங்கு வலிவூட்டப் பெற்று வருகின்றது என்பதையும், அவ்வெறி இங்கு எத்துணையளவு வேரூன்றியிருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்த்தும்.

மேலும் இங்குப் பலவாறான சாதி இயக்கங்கள் இயங்கி வருவதையும், அவை தங்கள் இனவேறுபாடுகளைப் பலவாறு விரிவுபடுத்திப் பூசல்கள் இட்டுக் கொள்வதையும் காணுங்கால் தமிழன் நிலாமண்டிலத்திற்கே போய் வாழ நேரிட்டாலும் சாணிச் சட்டியில்தான் தன் தலையைத் தோய்த்துக் கொள்வான் என்றே உறுதியாக நம்ப வேண்டியிருக்கின்றது. அவன் எத்தனை வகையான உடைகளை உடுத்தால் என்ன? எவ்வளவு உயர்ந்த உணவு வகைகளை உண்டால் என்ன? எத்தனை நாகரிகமுள்ள மக்களிடையில் போய் வாழ்ந்தால்தான் என்ன? அல்லது எத்தனை உயரமான கட்டிடங்களில் போய் வாழ்ந்தால் தான் என்ன? அவன் உள்ளத்தில் குலவேறுபாட்டு முடை நாற்றமும், மூளையில் உயர்ச்சி தாழ்ச்சியென்னும் மேடு பள்ளங்களும் அகற்றப் பெற்றுச் சமனிலைப் படாதவரை, தமிழகத்தின் குப்பை மேடுகளின் மலப்புழுவாய் அவன் நெளிவதும் அமெரிக்க அரசவை விருந்தினனாக அவன் உலாவருவதும் ஒன்றுதான்! அதனால் அவனுக்கோ பிறர்க்கோ என்ன பயன் ஏற்பட்டு விடப் போகின்றது என்பது விளங்கவில்லை.

இனி, என் அயலகச் செலவின் பொழுது நான் அறிந்து கொண்ட தமிழகச் செய்திகளுள் என்னை அதிரச் செய்தது, மதுரையில் நடந்த 'யாதவர்' மாநாட்டுத் தீர்மானந்தான். 'மொழி, மாநில வேறுபாடுகளை யெல்லாம் மறந்து இந்தியாவில் உள்ள யாதவர்களெல்லாம் ஒன்றுபடவேண்டும்', என்றும் 'இனிமேல் தென்னகத்தில் உள்ள யாதவர்களும் கோனார், பிள்ளை என்னும் குலப்பட்டங்களை வைத்துக்கொள்வதை விட்டு விட்டு வடநாட்டினர் போல் யாதவ்' என்னும் பட்டத்தையே வைத்துக் கொள்ள வேண்டும்', என்றும் அம்மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றவர்களின் பகுத்தறிவுக் கொள்கையின் மேல் விழுந்த சமட்டி அடிகளாகும்! இவ் விருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் மேனாட்டார் நிலாக் கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் வலைவீசிக் கொண்டுள்ள காலத்திலும் - தமிழர்கள் இத்தகைய கீழ்மை நிலைக்கும் கூடப்போகத்தான் போவார்களென்றால் அவர்கள் கற்காலத்திற்கே கூடத் திரும்பிப் போவது நல்லது என நெஞ்சார நினைக்கின்றேன்.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/51&oldid=1164368" இலிருந்து மீள்விக்கப்பட்டது