பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டாராம். இன்னும் சொன்னால் அவர் அப்படி நினைத்துக் கொள்ளட்டும் என்றே நான் அவ்வாறு சொல்லியிருக்கின்றேனாம்; கண்டுபிடித்திருக்கிறார்.

தெனாலிராமன் கதையில் ஒரு கதை உண்டு 'தனக்குள்ளது உலகத்திற்கு' என்பது அது. அதில் அரசனின் பணியாள் ஒருவன் தன்னிடம் கொஞ்சம் பொன் உள்ளதைக் கொண்டு, அரசன் கேட்டதற்கு மக்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பொன் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறுவான். அரசன் அமைச்சரைக் கொண்டு அவனிடமுள்ள அந்தக் கொஞ்சம் பொன்னையும் எடுத்துக் கொள்ளச் செய்த பொழுது, அந்தப் பணியாள் அரசனிடம் முக வாட்டமாக, 'இந்த நாட்டிலுள்ள மக்கள் கொஞ்சம் பொன்னுக்கும் வக்கற்றவர்களாக உள்ளார்கள்' என்பான்.

அந்தப்படி, நான் நம்மாள் என்பது, 'நம் கொள்கையுள்ள ஆள்: அல்லது தமிழினத்தவர்; அல்லது பிராமணரல்லாதவர்' என்று இடத்திற்குத் தக்கபடி பொருள் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இருக்கும். சாதியுணர்வு நெஞ்சில் நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கும் சிலருக்கு அவ்விடை வேறு பொருளில் பட்டிருக்கின்றது. அதற்கு நான் என்ன செய்வது?

கடைசியில் 'நான் வேறு சாதி; என் துணைவி வேறு சாதி' என்று கண்டு கொண்டாராம். அப்படிக் கண்டு கொண்டதுடன் நிற்காமல் தன் சாதியை விட என்சாதி மெலிந்த சாதி என்று வேறு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்? என்ன செய்வது? மாந்தன் படிநிலை வளர்ச்சிக் காலந்தொட்டு, சாதியுடனேயே இறைவனால் படைக்கப்பெற்றிருக்கின்றான் என்று பார்ப்பனர் சொல்லும் வருணாசிரம தர்மத்தைக் கடைபிடிப்பதில் அவர்க்கு அத்துணை அழுத்தமான நம்பிக்கை! ஆனால் புறத்தே பார்ப்பனியத்தைச் சாடுகின்ற கொள்கையை உடையவர், அவர்! அறிவியலும் படித்தவர். என்ன செய்வது? அறிவியல் வளர்ந்திருப்பது எல்லாம் வெறும் கருவி அளவில்தானே! மனஅளவை அதால் மாற்றிவிட முடியுமா, என்ன?

பகுத்தறிவு, பொதுமை, தமிழ், தமிழினம், மண்ணாங்கட்டி என்று பேசுவதெல்லாம் வெறும் கவர்ச்சிக்காகவும் காசுக்காகவும் என்று தானே பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! சாதியைக் கேட்டுத்தானே அறிவையும் கருத்தையும் கொள்கையையும் மதிப்பிடுகிறார்கள்! இந்தத்தமிழினம் என்றைக்குத்தான் உருப்படுமோ! இத்தகைய சாதிப் பேய்களும் வெறியர்களும் உள்ளவரை அஃது எங்கே உருப்படப் போகிறது!

ஒதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். (834)


தென்மொழி : சுவடி 18 ஒலை:10 (1982)

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/61&oldid=1164395" இலிருந்து மீள்விக்கப்பட்டது