பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாதி, மதக் கட்டுகளை உடைத் தெறியுங்கள் !

நம் நாட்டு மக்களை எல்லா நிலைகளிலிருந்தும் முன்னேற விட முடியாமல் செய்கின்ற, - நமக்கு நாமே அமைத்துக் கொள்கிற தடைகள், கட்டுகள் பல வகையானவையாகும். அவை குடும்பக் கட்டுகள்; குமுகாயத் தடைகள்; சாதி இடையூறுகள்; மத முட்டுக்கட்டைகள்! குழந்தைப் பருவத்திலிருந்தே இவை நம் நாட்டு மக்களை உள்ளரிப்புச் செய்து, அவர்களைப் பரந்துபட்டு வளர முடியாமல் பல வகையான வாழ்வியல் முன்னேற்ற நெருக்கடிகளை உண்டாக்கி விடுகின்றன. இவை இளைஞர்களிடம் உள்ள எதிர்ப்புணர்வுகளையும் தடைகளை மீறுகின்ற முன்னுணர்வு வேகங்களையும் பெரிதும் தாக்கி ஊறுபடுத்தி விடுகின்றன. பெரும்பாலும் அவர்களைக் குருடாக்கி மூலையில் கிடத்தி விடுகின்றன. முடமாக்கி நடையிடாமல் செய்து விடுகின்றன. தாங்கள் விரும்பிய உணர்வுகளைத் தம் அண்டை அயலாரிடம் எடுத்துக் கூறுவும் முடியாமல் கட்டு திட்டங்களாக அமைந்து விடுகின்றன. அவர்கள் அவற்றை உடைத்தெறியவும் முடியாதவாறு கோழைகளாகவும் போர்க்குணம் அற்றவர்களாகவும், ஒன்றை மீறிச் செய்யும் உணர்வற்றவர்களாகவும் அடக்கி ஒடுக்கி விடுகின்றன. பிறகு அவர்கள் எப்பொழுதுமே தங்கள் வாழ்க்கையில் சோர்வுற்ற சோடைகளாகிப் போகின்றனர்.

நம் மக்கள் சிறு குழந்தைகளாக முளைவிடும் பருவத்திலேயே பெற்றோர்களால், கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். தளதளவென்று உள்ளத்தில் உணர்வுகள் செழித்து வளர்கின்ற அப்பொழுதே அவர்கள் கால்களுக்கு கட்டுப்பாட்டு விலங்குகளைப் பூட்டி விடுகின்றனர். "அங்கே ஓடாதே; இங்கே ஓடாதே; அதைச் செய்யாதே; இதைச் செய்யாதே" - என்றபடி பற்பல இயக்கத் தடைகளைப் போட்டுக் கொண்டே இருக்கின்றனர், நம் பெற்றோர்கள். இத் தடைச் சொற்கள் பிற்காலத்தில்

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/62&oldid=1164396" இலிருந்து மீள்விக்கப்பட்டது