பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர்களுடைய நிலையில் அவர்கள் என்றும் மாறாத தன்மையுடையவர்களே! அவர்கள் தங்களுடைய பார்ப்பனீயத் தன்மையில் என்றுமே நெகிழ்ந்து விடாதவர்கள்! அவ்வாறிருக்க, அவர்களில் சிலர் மண்டல் குழு அறிக்கையை ஏன் வரவேற்பது போல் காட்டிக் கொள்கிறார்கள் எனில், நடுவண் அரசு நடைமுறைக்குத் தாங்கள் ஒத்துப் போவது போற்காட்டி - அதனால் தங்களுக் கேற்படும் தலையாய சாதி, மத நன்மைகளைத் தொடர்ந்து பெறுவதற்கே! மண்டல் குழு அறிக்கைச் செயற்படுத்தத்தால் நாட்டில் சாதி அமைப்பு ஒழிந்து போக வழியில்லை அன்றோ ? இந்த நிலையைப் பார்ப்பனர்கள் என்றும் வரவேற்கத்தானே செய்குவர்.

அடுத்து, தமிழர்களுக்கு ஒன்றை இவ்விடத்தில் நாம் கூறியே ஆகல் வேண்டும்.

மண்டல் குழு அறிக்கைச் செயற்படுத்தம் ஓர் இடைக்காலச் சலுகை முறையே! இதனால் தமிழினம் தலைநிமிர்ந்து விடவோ என்றும் நிலையான உரிமைகளைப் பெற்று விடவோ வாய்ப்பில்லை. தமிழ்நாடு தனி நாடாக அமையாத வரை, இது போலும் சலுகைகளுக்காக அவர்கள் வடநாட்டினரையும், பார்ப்பனீய வணிகக் கூட்டங்களையும் போற்றிக் கொள்வதுடன், அவர்களிடம் என்றென்றும் நாம் கையேந்தியே நிற்க வேண்டும் என்பதை என்றும் மறந்து விடவேண்டா. மண்டல் குழு அறிக்கைச் செயற்படுத்தம் போல் நமக்குக் கிடைக்கின்ற கோடிச் சலுகைகளை விட தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையால் கிடைக்கும் வெற்றி, பலகோடி உரிமை நலன்களை நமக்குத் தொடர்ந்து ஈட்டித் தரும், மீட்டுத் தரும் என்பது அழிக்க முடியாத உண்மையாகும்!

சலுகை போனால் போகட்டும் -நம்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒரு கோடி கண்ட - நம்
தமிழ் (இனம்) விடுதலை ஆகட்டும்!

- தமிழ்நிலம், இதழ் எண்.140. (1990)

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/69&oldid=1164492" இலிருந்து மீள்விக்கப்பட்டது