பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்களுக்குள் உள்ள பழங்குடியினர் சிலரை, ஆதி ஆந்திரர் (தெலுங்கர்), ஆதி கன்னடர், ஆதி கேரளர், ஆதி துளுவர் என்றுமே கூறி வருகின்றனர். உண்மையில் தமிழர் திராவிட இனத்துள் அடங்குபவரே அல்லர். தமிழரினின்று ஆரிய மொழி, இனக்கலப்பால் உருவாகிய தெலுங்கரும், கன்னடரும், மலையாளரும், துளுவரும் பிற நடு இந்திய, வட இந்திய தமிழினத் திரிபுக்குடிகளுமே திராவிடர் ஆவர். இதில் 'ஆதி' என்பதற்குப் பொருளே இல்லை. எனவே, ஆதிதிராவிடர் என்று இடைக்காலத்தில் அடையாளங்காட்டப் பெற்ற பழந்தமிழரே, தவறான முறையில் அப்பெயரால் அழைக்கப்பெற்று வருகின்றனர் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். எனவே அவர்கள் தங்களை ஆதிதிராவிடர் என்று அழைத்துக் கொள்ளும் வரலாற்றுப் பிழையை உணர்ந்து இனிமேல் தங்களை ஆதித்தமிழர் அல்லது அதனினும் சிறந்ததும் வரலாற்றுப் பொருத்தம் உடையதுமாகிய பழந்தமிழர் என்னும் சொல்லால் கூறிக் கொள்வார்களாக,

இவ்வகையில், அவர்களும் தமிழரே என்னும் உண்மையை வலுப்பெறச் செய்யவும், அதில் ஒரு பெருமையை மற்றவர்கள் உணரச் செய்யவும் தங்கள் மேல் ஆரியர் சாற்றிய இழிவைத் துடைத்துக் கொள்ளவும் இயலும் என்று உணர்தல் வேண்டும். வரலாற்று அடிப்படையில் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர் என்றும், இழிக்குலத்தவர் என்றும் ஊர்புறத்தே வைக்கப் பெற்ற கொடுமை, தொடக்கத்தில் அவர்கள் - தமிழரில் சிலர்-ஆரியரையும் ஆரியத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தமையால் ஏற்பட்ட விளைவால் நேர்ந்ததே என்பதை உணர்ந்து கொண்டால், அவர்களைப் பழந்தமிழர் என்பதே பொருத்தமும் உண்மையும் பெருமையும் ஆகும் எனத் தெளியலாம். மேலும், இவர்கள் ஆதிதிராவிடர் என்று தங்களை அழைத்துக் கொள்வதால், தமிழரினின்று இவர்கள் இன்று விலகி நிற்பது போல், பழந்தமிழர் என்று அழைத்துக் கொள்வதால் இவர்கள் விலகி நிற்கத் தேவையுமில்லை; இணைந்து நிற்கும் இன்றியமையாமையும் உண்டாகும் என்க.

'திராவிடர்' என்னும் பெயர் ஆந்திரர், கன்னடர், கேரளர், துளுவர் முதலிய அனைத்து இனத்தினர்க்கும் பொதுவானால், அவர்கள் ஏன் அப்பெயரால் தங்களை அழைத்துக் கொள்ள விரும்பவில்லை? திராவிடர் என்று கூறிக் கொள்ளும் வரலாற்றுத் தவறைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்ட தந்தை பெரியாரும் கூட, இவ்வகையில் தாம் குழப்பம் அடைவதாகவே கூறியுள்ளதும் இங்குக் கருதத் தக்கது. அவ்வாறிருக்க, தமிழர்கள் மட்டும் தங்களைத் திராவிடர்களென்றும், அதிலும் தமிழின முந்தையர் தங்களைப் பழந்தமிழர் என்று கூறிக் கொள்ளாமல் 'ஆதிதிராவிடர்கள்' என்று பொருளற்ற முறையில், தொடர்ந்து விடாப்பிடியாகக் கூறிக் கொள்ள ஏன் விரும்பவேண்டும்? இழிவை உடைமையாக்கிக் கொள்வது உரிமை மீட்பிற்கு உதவுமா, என்பதை

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/72&oldid=1164486" இலிருந்து மீள்விக்கப்பட்டது