பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மறை அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். முந்நூல் அணியும் விழாவும் முறைப்படி நடந்தேறியது. ஆபுத்திரன் அறிவும் ஒழுக்கமும் கண்டு அனைவரும் போற்றினர். அது கண்டு அவனைப்பேணி வளர்த்த அந்தணனும் அவன் மனைவியும் அகம் நிறை மகிழ் வெய்தினர்.

சில நாட்கள் சென்றன. ஒருநாள், ஆபுத்திரன் வயனங்கோட்டு வீதி வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த அந்தணன் ஒருவன் வீட்டிலிருந்து, ஆவொன்று அழுது கதறும் ஒலி வந்து ஒலித்தது. அது கேட்டு, ஆபுத்திரன் அம் மனையுட் புகுந்தான். அங்கே ஒரு வேள்விச்சாலை அமைக்கப் பெற்றிருந்தது. வேள்வித் தூணில் ஆவொன்று கட்டப் பெற்றிருந்தது. பன்னிற மலர்கொண்டு பின்னப்பெற்ற மாலை, அப்பசுவின் கழுத்திலும் கோட்டிலும் சூட்டப் பெற்றிருந்தது. சிறிது. பொழுதிற்கெல்லாம் தன்னே வெட்டி, வேள்வித்தீயில் இட்டுச் சுட்டுப் பொசுக்கித் தின்று விடுவாரே என்ற எண்ணம் அகத்தில் எழ, அப்பசு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தது. வேடர்கள் வீசும் அம்பினுக்கு அஞ்சி ஓடி, இறுதியில் அவர் விரித்த வலையிடை அகப்பட்டு ஆறாத்துயர் கொள்ளும் மான் போல் மனத்துயர் கொண்டு, “அம்மா” என அழைக்கும் அதன் நில கண்டு, ஆபுத்திரன் உள்ளம் நெகிழ்ந்தது. அவன் உள்ளம் உருகிற்று; அவன் கண்களில் நீர் ஊறிற்று. அப்பசு, உயிர் பிழைத்துப் போக வேண்டும் என்ற உணர்வு அவன் உள்ளத்தில் உரம் பெற்றது.

அவ்வூர் வாழ் அந்தணர்களின் இயல்பறிந்தவன் ஆபுத்திரன். ஆக் கொலை புரிந்து அவி சொறிந்து கேட்கும் வேள்வியில் வேட்கை மிக்குடையவர் அவ்