பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

படுவாய்” எனக் கடிந்துரைத்தனர். கைக் கோலால் நையப் புடைத்தனர் அந்தணர். அடிபொறுக்க மாட்டாது ஆபுத்திரன் அலறித்துடித்தான். நிகழ்வதைப் பார்த்துக் கொண்டு நின்ற ஆவிற்கு ஆறாச் சினம் பிறந்துவிட்டது. உடனே, ஆபுத்திரனைச் சுற்றி நின்று அடிப்பவர்களுக் குத் தலைமைதாங்கி நின்ற அந்தணர் மீது பாய்ந்தது. கோட்டால்குத்தி அவன் குடரைச் சரித்தது. காற்றெனப் பாய்ந்து காட்டுள் நுழைந்து மறைந்துவிட்டது.

ஆவின் செயலால் அந்தணர், ஆபுத்திரனே மேலும் கடுமையாகத் தாக்கத் தலைப்பட்டனர். அவர்கள் அடிப் பதைத் தாங்கிக் கொண்டவாறே ஆபுத்திரன் அவர்களைப் பார்த்து, “அந்தணப் பெருமக்களே! ஆத்திரம் கொண்டு அடிக்காதீர்கள். நான் கூறுவனவற்றைச் சினம் விடுத்துச் சிந்தையில் கொள்ளுங்கள். ஆவினங்களுக்கு அறுகம் புல்லைத் தேடி நாம் அளிப்பதில்லை. ‘மேய்ச்சல் நிலம்’ என அரசன் விட்ட இடங்களில் புல்லுண்டு உயிர்வாழ்கின்றன. ஆனல் அவை, நம் மக்கள் இனத்திற்கு அளிக்கும் நன்மைகள், அம்மம்ம! நம்மால் அளவிட்டுக் கூறத்தக்கன அல்ல. மக்கள் உயிர்கொண்டு உலகில் தோன்றும் அந்நாள் முதல், அவர்கள் மாண்டு மறையும் அந்நாள் வரை, அவர்க்கு, அறுசுவை உணவினும் அளவிலாப் பயன் நிறைந்த பால் உணவை ஊட்டி வளர்க்கின்றன பசுக்கள். பால் சுரத்தல் தன் பிறவிக்கடன் எனக் கருதி அன்போடு அளிக்கும் ஆவினத்தோடு மக்கள், பகைமை பாராட்டல் பண்பாமோ? அவற்றைக் கொன்று அவிசொரிதல் அறமாமோ? அருள் உடையார் எனப் பாராட்டப்பெறும் அந்தணர் குலத்தவர்க்கு அழகாமோ? அந்தணப் பெருமக்களே! கூறுங்கள்” எனக் கூறினான்.